ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும் ஆட்டோ டிரைவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு

வாகன பதிவு, புதுப்பித்தல் கட்டண உயர்வை ரத்து செய்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கோரி குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2017-06-06 23:00 GMT
நாகர்கோவில்,


குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட தலைவர் அந்தோணி தலைமையில், சட்ட ஆலோசகர் வக்கீல் மரிய ஸ்டீபன், மூத்த வக்கீல் செலஸ்டின், மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள், ஆட்டோ ஸ்டாண்ட் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசு, மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளில் வாகன பதிவு ஓட்டுனர் உரிமம் பெறுதல், பதிவுச்சான்று (எப்.சி.) புதுப்பித்தல், முகவரி மாற்றம், அபராதம் போன்றவற்றுக்கான கட்டணங்களையும், தவணை பதிவு கட்டணத்தையும், அபராதம் போன்றவைகளையும் 6 முதல் 30 மடங்கு வரை கடந்த டிசம்பர் மாதம் உயர்த்தியுள்ளது.

 இதனால் குமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமல்படுத்த வேண்டும்


 மத்திய அரசின் ஆட்டோ மற்றும் வாகனங்கள் பதிவு மற்றும் புதுப்பித்தல், அபராத கட்டண உயர்வால் ஆட்டோ தொழில் முற்றிலும் முடங்கிப்போகும் நிலை உள்ளது. இதனால் இந்த கட்டண உயர்வுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தமிழக ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அரசின் உத்தரவை ரத்து செய்தது. அதன்பிறகும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாமல் உள்ளனர்.

தமிழகத்தில் ஆட்டோ தொழிலையும், ஓட்டுனர்களின் வாழ்வையும் பாதுகாக்கும் வகையில் கட்டண உயர்வை ரத்து செய்ய கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கும்...


இதே கோரிக்கை அடங்கிய மனு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சென்னையில் உள்ள மாநில போக்குவரத்து ஆணையாளர், நெல்லை மண்டல போக்குவரத்து அதிகாரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்