பட்டா மாற்றம் செய்ய பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டா மாற்றம் செய்ய பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-06-06 23:00 GMT
கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74-கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள காட்டுக்கொட்டை பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 45). இவருடைய மனைவி சுமதி (35). இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியில் 1,080 சதுர அடியில் இரண்டு வீட்டு மனைகள் வாங்கினர். அந்த வீட்டு மனைகள் கூட்டு பட்டாவில் உள்ளன.

பட்டா மாற்றம்

இதனால் சுமதி, கூட்டுபட்டாவை பிரித்து உட்பிரிவு செய்து தரவேண்டும் என்று கடந்த 30-ந் தேதி ஆன்லைனில் பதிவு செய்தார். இதற்கான ரசீதை எடுத்து கொண்டு 74-கிருஷ்ணாபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் கொடுத்தார். கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றவும், உட்பிரிவு செய்து தரவும், குறிப்பிட்ட தொகை தரவேண்டும் என்று முருகேசன் கேட்டு உள்ளார். அப்போது, சுமதி எவ்வளவு தரவேண்டும்? என்று கேட்டதற்கு 12 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று முதலில் கூறியுள்ளார்.

பின்னர் சுமதி 2-ந் தேதி முருகேசனை மீண்டும் சந்தித்து பேசினார். அப்போது முருகேசன், உங்கள் நிலத்தை அளந்து பார்த்துதான் பட்டாவில் உட்பிரிவு செய்து தரமுடியும், அதனால் உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ.25 ஆயிரம் கேட்டு உள்ளார். அப்போது சுமதி இவ்வளவு தொகை எப்படி தர முடியும்? என்று கூறி வேதனை அடைந்தார்.

கிராம நிர்வாக அலுவலர் கைது

இதுகுறித்து நேற்று முன்தினம் சுமதி, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், நேற்று சுமதியிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை முருகேசனிடம் கொடுக்கும்படி கூறினர்.

அதன்படி, சுமதி அந்த பணத்தை முருகேசனிடம் கொடுத்தபோது அருகில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு சந்திரமவுலி, இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, செல்வகுமார், பூபதிராஜன் ஆகியோர் விரைந்து சென்று முருகேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

கைதான முருகேசன் வாரிசு வேலையின் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 74-கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் முதலில் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்