மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கிருஷ்ணகிரி அருகே மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-06-06 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் பெல்லாரம்பள்ளி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம் ஆகியவை உள்ள பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக மதுக்கடை தொடங்கப்பட்டது.

இதற்கு இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் ஊர்பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இன்னும் ஒன்றரை மாதத்துக்குள்ளாக வேறு இடத்திற்கு மதுக்கடையை மாற்றிவிடுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கடை திறக்கப்பட்டது.

கோடை விடுமுறைக்கு பின் இன்று (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவிகள் மற்றும் இந்த வழியாக 5 கிராமங்களுக்கு செல்லும் பெண்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் மதுக்கடையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, உடனடியாக இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என கோரி நேற்று காலை பெல்லாரம்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டனர்.

போலீசார் சமரசம்

இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இன்னும் 15 நாட்களுக்குள் கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்