செம்மஞ்சேரியில் கஞ்சா விற்பதில் தகராறு; வாலிபருக்கு அரிவாள் வெட்டு
செம்மஞ்சேரியில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளைசூரி (வயது 24), அஜித் (20), பாபுகான் (20). இவர்களில் ராஜேஷ் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து வெள்ளைசூரி, அஜித், பாபுகான் ஆகியோர் தினந்தோறும் கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து சுனாமிநகர், செம்மஞ்சேரி துலுக்கானத்தம்மன் கோவில் அருகில் தங்கி உள்ள வடமாநிலத்தினரிடம் மற்றும் அங்குள்ள மாந்தோப்பு பகுதி, கல்லூரிகள் அருகில் விற்பனை செய்து வந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜேஷுக்கும் மற்ற 3 பேருக்கும் குறிப்பிட்ட பகுதியில் கஞ்சா விற்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
3 பேர் கைது
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ராஜேஷை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் படுகாயம் அடைந்த ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தப்பிச்சென்ற 3 பேரும் பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் அருகே மறைந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். செம்மஞ்சேரி பகுதியில் நடைபெற்று வரும் இந்த கஞ்சா விற்பனையை முழுவதும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.