சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக சென்னையில் பரவலாக மழை பெய்தது
சுட்டெரித்து வந்த வெயிலுக்கு இதமாக சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் வறட்சி, குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் குளங்கள், ஏரிகள், அணைகள் வறண்டு போய்விட்டன. நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவில் குறைந்து போனது.
மழை கைகொடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும் என்ற பதிலுக்கு, மழை பெய்யுமா? என்ற கேள்வி அனைவருடைய மனதிலும் தோன்றியது. இந்த நிலையில் கடந்த மாதம் (மே) 30–ந்தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
இந்த பருவமழை தமிழகத்துக்கு கைகொடுக்குமா? என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மழை பெய்தது. மேலும், மற்ற இடங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆறுதல் வார்த்தையாக உள்ளது.
திடீர் மழை
இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ‘வார்தா’ புயலுக்கு பிறகு மழையை காணவில்லை என்றே சொல்லலாம். அவ்வப்போது மேகங்கள் சூழ்ந்து மழைக்கான சாத்தியக்கூறு ஏற்படும் சூழல் உருவாகி ஏமாற்றத்தையும் தந்தது.
இது ஒருபுறம் இருக்க சென்னை மக்களை வெயிலும் தன் பங்கிற்கு ஒரு கை பார்த்தது. கடந்த மாதம் முழுவதும் (மே) வெயில் வறுத்தெடுத்தது. வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல், ஏ.சி. இருக்கும் அறையே சொர்க்கம் என்று எண்ணத்தோன்றும் விதமாக வெப்பம் வாட்டி வதைத்தது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் சில பகுதிகளில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் வருணபகவான் கருணை காட்டமாட்டாரா? என்ற ஏக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக சென்னை நகரில் நேற்று பிற்பகலில் திடீரென்று மழை பெய்தது.
மகிழ்ச்சி
வாடிய பயிர் மழை பெய்யும்போது துளிர்விடுவதுபோல, வெயிலின் தாக்கத்தால் காய்ந்த சருகு போல இருந்த சென்னை மக்களுக்கு நேற்று பெய்த மழையால் மகிழ்ச்சி துளிர்த்தது.
சென்னையில் எழும்பூர், சூளைமேடு, அண்ணாநகர், நந்தனம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, மயிலாப்பூர், சேப்பாக்கம், அடையார், மணலி, மூலக்கடை, மாதவரம், பெரம்பூர், ராயப்பேட்டை, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை மட்டுமல்லாது, புறநகர் பகுதிகளில் சில இடங்களிலும் மழை பெய்தது.
திடீரென்று மழை பெய்ததால் வாகனங்களில் சென்றவர்கள் ஆனந்தமாக நனைந்தபடி சென்றனர். சிறிதுநேரமே மழை பெய்தாலும், கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக இந்த மழை இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.