தீயில் கருகி உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்க தாமதம் ஏன்?

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடித்து முடிக்க தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தை அந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.;

Update: 2017-06-06 23:30 GMT
சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த மாதம் 31–ந்தேதி அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கட்டிடம் முழுவதும் எரிந்து உருக்குலைந்து போனது. இதையடுத்து அந்த கட்டிடத்தை இடித்து தகர்க்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2–ந்தேதி இடிக்கும் பணி தொடங்கியது. 

இந்த பணியில் ‘ஜா கட்டர்’ என்ற ராட்சத எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும்போது, இந்த பணி 6 நாட்களில் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது அந்த பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

5–வது நாளாக இடிக்கும் பணி

தமிழக அரசு கூறியதற்கிணங்க, நாங்கள் கட்டிடத்தை இடிக்கும் பணியை தொடங்கினோம். ஒரு பெரிய ‘ஜா கட்டர்’ எந்திரமும், 5 சிறிய வகை ‘ஜா கட்டர்’ எந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கட்டிடத்தை இடிக்கும் பணிக்கான அனைத்து செலவுகளும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அரசு கூறியதையடுத்து, எந்தவித மறுப்பும் சொல்லாமல் இதுவரை நாங்கள் இந்த பணியை செய்து வருகிறோம். ஒரு மணி நேரத்திற்கு பெரிய எந்திரத்துக்கு ரூ.20 ஆயிரமும், சிறிய எந்திரத்துக்கு ரூ.8 ஆயிரமும் கட்டணமாக இருக்கிறது. இதுவரை 5 நாட்கள் பணி செய்து இருக்கிறோம். 

தாமதம் ஏன்?

சட்டப்படி கட்டிடத்தின் 3 பக்கங்களிலும் குறைந்தது 25 அடி அகலம் இடம் இருக்க வேண்டும். ஆனால் அது இல்லை. இதனால் எங்களுக்கு இடிக்கும் பணியில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த கட்டிடத்துக்கு அருகில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் இருக்கின்றன.

கட்டிடத்தை இடிக்கும் போது பெரிய அளவிலான கற்கள் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகள் மீது விழுகின்றன. இதற்கு அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். குடியிருப்புகள் மற்றும் கடைக்காரர்களிடம் அவர்கள் பேச வேண்டும். இந்த காரணங்களினால் தான் எங்களால் பணியை குறிப்பிட்ட நாட்களுக்குள் இடித்து முடிக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

10 நாட்கள் நீடிக்கும்

இன்னும் 10 நாட்களுக்கு மேல் இந்த பணி நீடிக்க வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தால் 130 அடி உயரம் உள்ள இந்த கட்டிடத்தை 2 அல்லது 3 நாட்களில் எளிதாக இடித்துவிட முடியும். 

வெடிகுண்டு வைத்தும் இந்த கட்டிடத்தை தகர்க்க முடியாது. ஏனென்றால் கட்டிடத்தை சுற்றி 300 மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டிடமும் இல்லாமல் இருந்தால் மட்டுமே வெடிவைத்து தகர்க்க முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்