போலீஸ் நிலையங்களில் குறைகேட்கும் நிகழ்ச்சி: சென்னையில், ஒரே நாளில் 418 புகார் மனுக்கள் குவிந்தன
சென்னையில் போலீஸ் நிலையங்களில் குறை கேட்கும் நிகழ்ச்சியில், ஒரே நாளில் 418 புகார் மனுக்கள் பெறப்பட்டன.
சென்னை,
சென்னையில் போலீஸ் நிலையங்களில் தினமும், பகலிலும், இரவிலும் 2 முறை இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை வாங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
சென்னையில் உள்ள 135 போலீஸ் நிலையங்களிலும் நேற்று முன்தினம் பொதுமக்களை சந்தித்து இன்ஸ்பெக்டர்கள் புகார் மனுக்களை பெற்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 418 புகார் மனுக்கள் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 10 போலீஸ் நிலையங்களில், இன்ஸ்பெக்டர்கள் மனுக்கள் வாங்க காத்திருந்தனர். ஆனால் பொதுமக்கள் யாரும் மனு கொடுக்க வரவில்லை என்று தெரியவந்தது.
வரவேற்பு
பரங்கிமலை துணை கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களில் அதிகபட்சமாக 77 மனுக்கள் வாங்கப்பட்டது. மயிலாப்பூரில் மிகவும் குறைவாக 15 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன. பூக்கடை பகுதி போலீஸ் நிலையங்களிலும் 17 மனுக்கள் மட்டுமே வந்தன.
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தினமும் இந்த திட்டத்தை நேரடியாக கண்காணித்து வருகிறார். இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவார்களா? என பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.