பசுமை தாயகம் சார்பில் ‘குப்பை இல்லா சென்னை’ விழிப்புணர்வு பிரசாரம் சவுமியா அன்புமணி பங்கேற்பு

‘குப்பையில்லா சென்னை’ என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது.

Update: 2017-06-06 22:45 GMT
சென்னை,

பசுமை தாயகம் அமைப்பு சார்பில் தூய்மை இந்தியா மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் ‘குப்பையில்லா சென்னை’ என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம் சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமை தாங்கினார். 

இதில் ‘குப்பையில்லா சென்னை’ என்பதை மையமாக கொண்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதில் சவுமியா அன்புமணி கையெழுத்திட்டார். அதனைத்தொடர்ந்து குப்பையில்லா சென்னையை உருவாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார்.

இதுகுறித்து சவுமியா அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘உலக சூற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி இருக்கிறோம். இந்தியாவில் அதிகமாக குப்பையை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் சென்னை தான் அதில் முதல் இடம் பெறுகிறது. குப்பை அதிகமாவதால் 25 சதவீதம் நோய்க்கு மூலக்காரணமாக அமைகிறது. இதை மாற்ற குப்பைகளை வகைப்படுத்தி பிரிக்க வேண்டும். இதற்கு பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை தரவேண்டும். அவ்வாறு பிரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி முறையாக மேலாண்மை செய்ய வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்