கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஓய்வு பெற்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உள்பட 5 பேர் கைது;

Update: 2017-06-06 22:30 GMT

வண்டிப்பெரியார்,

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஓய்வு பெற்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கள்ள ரூபாய் நோட்டுகள்

வண்டிப்பெரியார் பகுதியில் கடந்த மே மாதம் 8–ந் தேதி 4 லட்சத்து 7 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் அதே பகுதியை சேர்ந்த ஜோஜோஜோசப். அவருடைய மனைவி அனுபாமா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தம்பதியிடம் விசாரணை செய்தபோது தமிழ்நாடு மதுரை ஸ்ரீராம் தெருவை சேர்ந்த அன்புசெல்வன் என்ற ராஜூபாய் (வயது 48) உள்பட சிலரிடம் கள்ள ரூபாய் நோட்டுகளை வாங்கியதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கள்ள ரூபாய் நோட்டு கும்பலை ‘பொறி’ வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தம்பதியை செல்போன் மூலம் அன்புச்செல்வனிடம் பேசி கள்ள ரூபாய் நோட்டுகளை போடிமெட்டு பகுதிக்கு கொண்டு வர தகவல் கொடுத்தனர். அதன்படி அன்புச்செல்வன் தனது கும்பலுடன் போடிமெட்டுக்கு கள்ள ரூபாய் நோட்டுகளுடன் வந்தார்.

5 பேர் கைது

பின்னர் அவர்கள், தம்பதியிடம் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், மதுரையை சேர்ந்த அன்புச்செல்வன், கொல்லம் கருநாகப்பள்ளி ஆதிநாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (44), நெடுங்கண்டம் மைனர்சிட்டி பகுதியை சேர்ந்த சுனில்குமார் (39), புற்றடி அச்சனகானம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (57), சாவக்காடு பகுதியை சேர்ந்த ஷிகாபுதின் (43) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 37 லட்சத்து 92 ஆயிரத்து 500 கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓய்வு பெற்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர்

இதுகுறித்து எர்ணாகுளம் போலீஸ் சரக ஐ.ஜி.விஜயன் நிருபர்களிடம் கூறும்போது, வண்டிப்பெரியாரில் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் தம்பதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட கிருஷ்ணகுமார் எல்லைப் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவர், மீது கடந்த 2015–ம் ஆண்டு 2 லட்சத்து 50 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விட்டதாக பெருந்தன்மன்னா போலீசில் வழக்கு உள்ளது. எனினும் அவர், தனது கும்பலுடன் சேர்ந்து பந்தளம், மண்ணார்காடு, பீர்மேடு பகுதிகளில் கள்ளரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார்.

சர்வதேச கும்பலுக்கு தொடர்பு

இவர்கள் ரூ.1 லட்சம் வாங்கி கொண்டு, 4 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து வந்துள்ளனர். கள்ள ரூபாய் நோட்டுகளை எங்கே அச்சிட்டு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களுக்கும், சர்வதேச கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தேசிய புலனாய்வு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்