பள்ளிக்கூடங்கள் இன்று திறப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடை வழங்க உத்தரவு

சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (புதன்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், சீருடை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2017-06-06 22:45 GMT
சேலம்,

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிக்கூடம் ஜூன் 7-ந் தேதி திறக்கப்படும் என்று கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (புதன்கிழமை) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

இந்தநிலையில், பள்ளிக்கூடம் திறக்கப்படும் முதல் நாளில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு மற்றும் சீருடை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதற்காக சேலம் மற்றும் சங்ககிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம், சீருடைகள் அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த பணிகளை அந்தந்த வட்டாரத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கண்காணித்தனர்.

காலணிகள் அனுப்பும் பணி

தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள், சீருடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாநகர் பகுதியில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலணிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது.

சேலம் மணக்காடு மாநகராட்சி தொடக்க பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் காலணிகளை மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த பள்ளிகளுக்கு சேலம் உதவி தொடக்க கல்வி அலுவலர் (நகர்புறம்) மகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் வாகனங்களில் அனுப்பி வைத்து உறுதி செய்தனர். மேலும், பள்ளிகள் திறந்தவுடன் முதல் நாளில் மாணவ-மாணவிகளுக்கு சீருடை, பாடப்புத்தகம், காலணி, கலர் பென்சில் போன்றவற்றை கொடுத்துவிட்டு அதன் விவரத்தை மாவட்ட கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கல்வித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடை விடுமுறை முடிவுற்றதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்