தமிழக பா.ஜனதா தலைவர்களின் விமர்சனங்களுக்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டியது இல்லை

தமிழக பா.ஜனதா தலைவர்களின் விமர்சனங்களுக்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டியது இல்லை நதிநீர் இணைப்பு மாநாட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேச்சு

Update: 2017-06-06 23:00 GMT

ஈரோடு,

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று ஈரோட்டில் நடந்த நதிநீர் இணைப்பு மாநாட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

ஈ.ஆர்.ஈஸ்வரன்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

மாநாட்டுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சென்னியப்பன், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை தலைவர் ஆர்.தேவராஜன், பொருளாளர் கே.கே.சி.பாலு, துணைத்தலைவர் சக்திகோச் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

மலரை தென்னிந்திய நதிகள் இணைப்பு இயக்க தலைவரும், புதுடெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் குழு தலைவருமான அய்யாக்கண்ணு, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியபோது கூறியதாவது–

தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் யாரும் குறைகூற முடியாத தூய்மையான தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். யாரை அழைத்தால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று பார்த்தால் அது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினால் முடியும் என்று எண்ணி அவரை அழைத்து இருக்கிறோம்.

இந்த நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோட்டில் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே பவானி–நொய்யல் ஆறுகளை இணைத்து காலிங்கராயன் வாய்க்காலை வெட்டி நதிகள் இணைப்புக்கு முன்னோடியாக விளங்கும் காலிங்கராயனின் மண்ணில் இருந்து இந்த மாநாட்டை நடத்துவதால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

நிலத்தடி நீர்மட்டம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை வெயில் இல்லை. இப்போது ஏன் இந்த வெயில்?. மழை பொழிவு குறைந்தது ஏன்? குடிநீர் பஞ்சம் ஏன்? சாயக்கழிவு, தொழிற்சாலை கழிவு பிரச்சினைகள் ஏன்?.

ஏனென்றால் அப்போது நிலத்தடிநீர் மட்டம் 100 அடிக்குள் இருந்தது. ஆனால் இப்போது 2 ஆயிரம் அடியில் கூட கிடைக்கவில்லை. இப்போது நாம் நினைத்தால் கூட நிலத்தடி நீர்மட்டத்தை மேலே கொண்டு வர முடியும். அதற்கான முன் முயற்சிதான் இந்த மாநாடு.

நதிநீர் இணைப்பு என்றால் கங்கையையும் காவிரியையும் இணைப்பது மட்டுமல்ல. அது தேசிய நதிகள் இணைப்பு திட்டம். அதுவும் சாத்தியம்தான். அதற்கு முன்பு நமது மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். குளம், குட்டைகளில் நீர் நிரப்ப வேண்டும். நமது கொங்கு மண்டலத்தில் உள்ள நதிகளை இணைத்து, குளம் குட்டைகளுக்கு நீர் கொண்டு வர பல லட்சம் கோடி ரூபாய்கள் தேவை இல்லை. வெறும் ரூ.10 ஆயிரம் கோடி இருந்தால் போதும். 5 ஆண்டு ஆட்சிகாலத்தில் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கினால் இது சாத்தியம். அப்படி ஒரு சாத்தியத்தை மு.க.ஸ்டாலினால் நிறைவேற்ற முடியும்.

தண்ணீர் பஞ்சம் வராது

அத்திக்கடவு –அவினாசி திட்டத்துக்கு அ.தி.மு.க. ரூ.250 கோடி ஒதுக்கியது என்றார்கள். அந்த பணம் எங்கே?. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நம்மால் மட்டுமே நிறைவேற்ற முடியும். பாண்டியாறு–புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்பட்டால் கொங்கு மண்டலத்தில் தண்ணீர் பஞ்சமே வராது.

மத்திய பா.ஜனதா அரசு புதிது புதிதாக பிரச்சினைகளை உருவாக்கி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 8 தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இதுபற்றி பா.ஜனதா தலைவர்களுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சி சந்தேகம்தான்

தி.மு.க.வின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்ன என்றால், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் சொல்ல தேவையில்லை. அவர்கள் உங்கள் மூலமாக விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். அதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டாம்.

நதிகள் இணைப்பு என்ன ஆனது?, தமிழக மாணவர்களின் நீட் தேர்வு வினாத்தாள் மட்டும் வித்தியாசமாக கேட்கப்பட்டது ஏன்? என்று பா.ஜனதாவினர் விளக்க வேண்டும். விவசாயி அய்யாக்கண்ணுவை பிரதமர் சந்திக்காமல் தமிழர்களை அவமதித்து விட்டார். அதற்கு காரணம் இங்கிருக்கும் ஆட்சியாளர்களை அவர் மதிக்கவில்லை.

தமிழக மக்கள் அனைவரும் இப்போதே ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். மு.க.ஸ்டாலின் சென்னை செல்லும்போது தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி இருக்குமா? என்பதே சந்தேகம்தான்.

அ.தி.மு.க.வினருக்கு ஒரு வேண்டுகோள். அமைச்சர்களும், கட்சி பொறுப்பாளர்களும் அடிமைகளாக இருக்கட்டும். தொண்டர்கள் ஏன் அடிமைகளாக இருக்க வேண்டும். அனைவரும் வெளியே வாருங்கள். கொங்கு மண்டலம் தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணியின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. நாம் அதை நிரூபித்து காட்டுவோம். தி.மு.க. கூட்டணியின் வெற்றி சாத்தியமாம். அது நடக்கும். போராடுவோம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

தீர்மானங்கள்

மாநாட்டில் இளைஞர் அணி மாநில செயலாளர் சூரியமூர்த்தி, ஆலோசகர் சபாபதி, காங்கயம் இன மாடுகள் ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேயன் சிவசேனாதிபதி உள்பட பலர் பேசினார்கள்.

கட்சியின் துணைத்தலைவர் தங்கவேல் மாநாட்டு தீர்மானங்கள் படித்தார்.

தீர்மானங்கள் வருமாறு–

* தென்னக நதிகளை இணைக்க வேண்டும்.

* தமிழ்நாடு அரசு குடிமராமத்து திட்டத்தில் போர்க்கால அடிப்படையில் ஏரி, குளம், அணைகளை தூர்வாரி நீர் போக்குவரத்து கால்வாய்களை சீரமைத்து, மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வட இந்திய நதிகளை, தென்னிந்தி நதிகளுடன் இணைத்து நீர்வழிப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

* விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற அனைத்து பொருட்களையும் சேமிக்கும் கிடங்குளை அனைத்து தாலுகாக்களிலும் அமைக்க வேண்டும். கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம்விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய கடன்கள்

* விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்.

* பாண்டியாறு–புன்னம்புழா, அவினாசி–அத்திக்கடவு, பரம்பிக்குளம்–ஆழியாறு, மேட்டூர் உபரிநீர் திட்டம், திருமணிமுத்தாறு, வசிஷ்டநதி, கொளத்தூர்–தோணிமடுவு நீர்ப்பாசன திட்டங்களை அரசு உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கக்கூடாது.

* விவசாயத்துறைக்கு தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும்.

கருணாநிதிக்கு பாராட்டு

மேற்கண்ட தீர்மானங்களுடன் 94–வது பிறந்தநாள் கண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பாராட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் நிர்வாகிகள் அசோகன், சந்திரசேகர், கோபால்சாமி, ஜெகநாதன், பிரபாகரன், ஈஸ்வரமூர்த்தி, சாமிநாதன், முத்துசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநாட்டுக்குழு தலைவர் துரை ராஜா வரவேற்றார். ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று மாலை பலத்த மழை பெய்தாலும் மாநாட்டின்போது மழை இல்லை. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் மைதானத்தில் குவிந்தனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்