சங்கரன்கோவில் அருகே பரிதாபம் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பரிதாபமாக பலியானாள்.

Update: 2017-06-06 21:00 GMT

திருவேங்கடம்,

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பரிதாபமாக பலியானாள்.

5 வயது சிறுமி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள திருவேங்கடத்தில் அக்ரஹாரம் தெருவில் வசித்து வருபவர் ராஜ். இவருடைய மகள் ஜீவிகா (வயது 5). இவளுக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் தீவிரமானதை அடுத்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜீவிகாவுக்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. அங்கு அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஜீவிகாவை சேர்த்தனர். அங்கும் காய்ச்சல் குணமாகாத நிலையில், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சாவு

அங்கு சிறுமி ஜீவிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை ஜீவிகா பரிதாபமாக இறந்தாள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவேங்கடத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டினால் தான் டெங்கு காய்ச்சல் உருவாகி உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாகவும், சுகாதார துறையினர் போர்க்கால நடவடிக்கை எடுத்து டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்