ஊட்டி மார்லிமந்து அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது

தென்மேற்கு பருவமழையையொட்டி ஊட்டி மார்லிமந்து அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது

Update: 2017-06-06 22:00 GMT

ஊட்டி,

தென்மேற்கு பருவமழையையொட்டி ஊட்டி மார்லிமந்து அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது.

ஊட்டி நகராட்சி

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதுதவிர நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், சொகுசு விடுதிகள் உள்ளன. மேலும் குளு, குளு நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ள ஊட்டியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு அணைகள் கட்டப்பட்டு உள்ளன.

குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, டைகர்ஹில் அணை, மார்லிமந்து அணை, தொட்டபெட்டா மற்றும் லோயர் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள தண்ணீர் மூலம் ஊட்டி நகராட்சியின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருகிறது.

தூர்வாரும் பணி மும்முரம்

ஊட்டியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக இந்த அணைகளின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. தற்போது, தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஊட்டியில் உள்ள அணைகளை தூர்வாரும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) பிரபாகர் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஊட்டியில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அணைகளை தூர்வாரும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஊட்டி மார்லிமந்து அணை 9.6 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த அணை 120 அடி நீளமும், 40 அடி அகலமும் உள்ளது. மேலும் அணையில் 23 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, அணையில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தோண்டி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணை தூர்வாரப்படுவதால் கூடுதலாக 5 அடி வரை தண்ணீர் சேமிக்க முடியும்.

ரூ.16 லட்சம் ஒதுக்கீடு

கோரிசோலா அணை 2.2 ஏக்கர் பரப்பளவும், 30 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்டது. 35 அடி உயரம் அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையில் 3 அடி ஆழம் வரை தூர்வாரும் பணி நடக்கிறது. அப்பர் கோடப்பமந்து அணை 1 ஏக்கர் பரப்பளவில், 30 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டது. இந்த அணையில் 12 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்கலாம். மேற்கண்ட 3 அணைகளையும் தூர்வார நகராட்சி சார்பில் ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த அணைகள் தூர்வாரப்படுவதால் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது வனப்பகுதிகளில் வழிந்தோடும் தண்ணீரை அதிகமாக சேகரிக்க முடியும். இதனால் அணை நிரம்பி தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்கலாம். மேலும் ஊட்டி நகராட்சியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

ஊட்டி அணைகளில் தூர்வாரிய மண்ணை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, விவசாயிகள் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு மண் அள்ளுவதற்கான அனுமதியை பெற்று, தங்கள் விளைநிலங்களுக்கு மண்ணை கொண்டு சென்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்