தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அடகு வைத்த நகைகளை ஏலம் விடுவதை நிறுத்த கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அடகு வைத்த நகைகளை ஏலம் விடுவதை நிறுத்த கோரிக்கை

Update: 2017-06-06 22:15 GMT

சிவகங்கை,

வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் அடகு வைத்த தங்க நகைகளை ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிப்பு

சிவகங்கை நகராட்சி முன்னாள் தலைவரும், காவிரி–வைகை–குண்டாறு இணைப்பு கால்வாய் விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளருமான அர்ச்சுனன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 26–ந்தேதி நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், மாவட்டம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்காக அடகு வைத்த நகைகளை ஏலம் விடுவதை நிறுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து கலெக்டர் கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் நகைகள் ஏலம் விடுவதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும்

ஆனால் குன்றக்குடி, எஸ்.எஸ்.கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அடகு வைத்த தங்க நகைகளை ஏலம்விட அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியும் சில கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் அடகு வைத்த தங்க நகைகளை ஏலம் விட முயற்சித்து வருகின்றன.

விவசாயிகள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அடகு வைத்த தங்க நகைகளை ஏலம்விடுவதால் அவர்கள் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர். எனவே நகைகள் ஏல அறிவிப்பை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு வங்கிகள் நிறுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் அடகு வைத்த தங்க நகைகளை திருப்புவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்