திருச்சியில் பட்டப்பகலில் இரட்டை கொலை: முக்கிய குற்றவாளிகள் 7 பேர் கோர்ட்டில் சரண்
திருச்சியில் பழிக்கு பழியாக பட்டப்பகலில் இரட்டை கொலை: முக்கிய குற்றவாளிகள் 7 பேர் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண்
ராமநாதபுரம்,
திருச்சியில் பட்டபகலில் பழிக்குப்பழியாக நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 7 பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
கொலைதஞ்சாவூர் மாவட்டம் திருச்சணம்பூண்டி மாதாகோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வையாபுரி என்பவரின் மகன் செந்தில் (வயது 35). இவரது நண்பர் அதே பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆசிர்வாதம் என்பவரின் மகன் வின்சென்ட்(34). இவர்கள் இருவரும் கடந்த 1–ந் தேதி திருச்சியில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் ஓயாமரி மயானம் அருகே வந்தபோது அவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளனர். இதனால் நிலைதடுமாறி விழுந்த 2 பேரையும் அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் விடாமல் துரத்தியது. இதன்காரணமாக செந்தில், வின்சென்ட் ஆகியோர் கல்லணை சாலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள அச்சத்துடன் ஓடியுள்ளனர். ஆனால், மர்ம கும்பல் அவர்களை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் கடந்த 2015–ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் திருக்காட்டு பள்ளியில் நடைபெற்ற ரவுடி பஞ்சாபகேசன் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த இரட்டை கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 7 குற்றவாளிகள் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் சரணடைந்தனர். 7 பேர் சரண்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளி பூண்டி அலமேலுபுரம் பால்ராஜ் மகன் கலியமூர்த்தி(34), துரைமாணிக்கம் மகன் சரவணன்(30), திருக்காட்டுப்பள்ளி கூடனானள் பாலமுருகன் மகன் தங்கதுரை(22), தஞ்சாவூர் பாவனமங்களம் ராதாகிருஷ்ணன் மகன் சதீஷ்(23), திருச்சனம்பூண்டி துரைமாணிக்கம் மகன் குமார்(46), திருக்காட்டுப்பள்ளி ராஜேந்திரன் மகன் கண்ணன்(36), திருச்சனம்பூண்டி முருகையன் மகன் அன்பழகன்(31) ஆகிய 7 பேரையும் விசாரணை செய்த நீதிபதி இசக்கியப்பன் அனைவரையும் 15 நாள் சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அந்த 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். பழிக்குப்பழியாக திருச்சியில் பட்டபகலில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 7 பேர் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.