மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: 2 கிராமமக்கள் கலெக்டரிடம் மனு

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-06-06 04:50 GMT
நாமக்கல்,

திருச்செங்கோடு அருகே உள்ள ஓ.ராஜாபாளையம் குட்டிமேய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

குட்டிமேய்க்கன்பட்டியில் இருந்து பால்மடை செல்லும் வழியில் புறம்போக்கு நிலத்தில் பாறைகளை உடைத்து மதுக்கடை அமைப்பதற்கான கட்டிட வேலை நடந்து வருகிறது. இந்த பகுதியில் ஏற்கனவே மது அருந்த கூட்டம், கூட்டமாக வந்து செல்லும் நபர்கள், மது குடித்து விட்டு சாலையில் பாட்டிலை உடைப்பதும், தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டு இருப்பதும் வழக்கமாக உள்ளது.

இங்கு மதுக்கடை அமைத்தால், அவர்களுக்கு மேலும் சாதகமான இடமாக அமைந்து விடும். வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல், தனியாக சென்று வர முடியாத சூழ்நிலை உருவாகும். விவசாய நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாங்கள் மதுக்கடை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

எர்ணாபுரம்

இதேபோல் நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்களும் நேற்று மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

எர்ணாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுக்கடை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இங்கு மதுக்கடை அமைத்தால் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகும். மேலும் மதுக்கடை அமைய உள்ள பகுதிக்கு அருகே குடியிருப்பு மற்றும் கோவில் உள்ளதால் மக்களின் சகஜமான வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே தாங்கள் (கலெக்டர்) தலையிட்டு எங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்