127 பேராசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள 127 பேராசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-06 04:20 GMT
தர்மபுரி,

தமிழகத்தில் தர்மபுரி, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும் என்றும், இந்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தர்மபுரி அரசு சட்டக்கல்லூரி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே தர்மபுரி அரசு சட்டக்கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதற்கு தர்மபுரி பகுதியில் பல்வேறு கட்டிடங்கள் பரிசீலிக்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளி வளாகத்தை தமிழக சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கலெக்டர் விவேகானந்தன் இந்த பள்ளி வளாகத்தில் உள்ள வசதிகள் குறித்து அமைச்சர்களிடம் எடுத்துக் கூறினார்.

பேராசிரியர் பணியிடங்கள்

அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மபுரி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் சட்டம் பயிலுவதற்கு ஏதுவாக தர்மபுரியில் புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கோவை அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் சிவதாஸ் இந்த கல்லூரியின் தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கல்லூரியில் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சட்டப்படிப்புகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தால் பரிசீலிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு மாணவ, மாணவிகள் அழைக்கப்படுவார்கள். தர்மபுரி நகராட்சி பெண்கள் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக அமைய உள்ள சட்டக்கல்லூரிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் புதிய கட்டிடங்கள் கட்ட தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள 127 பேராசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

இந்த ஆய்வின் போது கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் பழனிசாமி, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், கோபால், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்