விவசாயிகளின் போராட்டம் எதிரொலி: சட்டசபை சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் அசோக் சவான் வலியுறுத்தல்

விவசாயிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு சட்டசபை சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் வலியுறுத்தினார்.

Update: 2017-06-05 23:52 GMT
மும்பை,

காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநிலத்தில் மிகவும் தீவிரமான சூழல் நிலவுகிறது. விவசாயிகளின் காலவரையற்ற போராட்டம் தொடர்ந்து நீடிக்கிற போதிலும், அது வாபஸ் பெறப்பட்டு விட்டதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், விவசாய துறை மந்திரி சதபாவு கோட்டும் அறிவித்தது தவறு. விவசாயிகளின் போராட்டம் குறித்தும், பயிர்க்கடன் மீதான மாநில அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளவும், உடனடியாக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்.

குண்டர்கள்

விவசாயிகளை முதல்-மந்திரியால் வேறுபடுத்த முடியாது. தொடர்ந்து 3 ஆண்டுகள் வறட்சி நிலவுவதால், விவசாயத்துக்கு தேவையான வசதிகள் போதிய அளவு கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் இக்கட்டான சூழலில் தவிக்கின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை அரங்கேறியதாகவும், இதில் எதிர்க்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாகவும் முதல்-மந்திரி குற்றம்சாட்டுகிறார். எந்த கட்சியில் அதிக எண்ணிக்கையிலான குண்டர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை

நாங்கள் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆண்டுக்கு சுமார் 14 சதவீதம் உயர்த்தினோம். தற்போதைய பாரதீய ஜனதா அரசு கடந்த 3 ஆண்டுகளில், குறைந்தபட்ச ஆதரவு விலையை வெறும் 1.5 சதவீதம் மட்டுமே உயர்த்தி இருக்கிறது.

இவ்வாறு அசோக் சவான் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்