காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி உயிருடன் எரித்துக் கொலை தாய், சகோதரி உள்பட 4 பேர் கைது

விஜயாப்புராவில், வேறு மதத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கர்ப்பிணியின் தாய், சகோதரி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2017-06-05 23:40 GMT
பெங்களூரு, 

விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகா தாலிகோட்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குன்டகானலா கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா கொன்னூர் (வயது 25). அதே கிராமத்தை சேர்ந்தவர் பானுபேகம் (21). இவர்கள் 2 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சரணப்பாவும் பானுபேகமும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பானுபேகம் சரணப்பாவை காதலிப்பது, பானுபேகத்தின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.

இதுதொடர்பாக 2 குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனால் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி சரணப்பாவை திருமணம் செய்ய பானுபேகம் தயாராக இருந்தார். மேலும் சரணப்பாவை திருமணம் செய்தவற்காக மதம் மாறவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பானுபேகத்தை சரணப்பா திருமணம் செய்ய, அவரது குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் கடந்த சில மாதங்களாக சரணப்பாவும், பானுபேகமும் கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்தார்கள். மேலும் பானுபேகம் கர்ப்பம் அடைந்தார்.

உயிருடன் எரித்துக் கொலை

இதுபற்றி அறிந்ததும் தங்களது மகளை கடத்தி சென்று சரணப்பா கற்பழித்து விட்டதாக கூறி தாலிகோட்டே போலீசில் பானுபேகத்தின் பெற்றோர் ஒரு வாரத்திற்கு முன்பு புகார் கொடுத்தனர். அதன்பேரில், சரணப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சரணப்பாவும், பானுபேகமும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் பானுபேகத்தின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சரணப்பா மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது.

இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி நள்ளிரவில் சரணப்பாவும், பானுபேகமும் தங்கி இருந்த வீட்டிற்கு பானுபேகத்தின் குடும்பத்தினர் சென்று, சரணப்பாவை அடித்து உதைத்து தாக்கினார்கள். மேலும் கர்ப்பிணியான பானுபேகத்தின் உடலில் தீவைத்தார்கள். இதனை தடுக்க முயன்ற சரணப்பாவின் உடலிலும் தீப்பிடித்தது. இதனால் 2 பேரும் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பானுபேகம் இறந்து விட்டார். சரணப்பாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 பேர் கைது

இதுகுறித்து தாலிகோட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுபேகத்தின் தாய், சகோதரி, சகோதரர் மற்றும் உறவினர் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பானுபேகத்தின் சகோதரர்கள், சில உறவினர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

வேறு மதத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணியை குடும்பத்தினரே உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் விஜயாப்புராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்