புதுச்சேரி அரசியலில் பரபரப்பு: கிரண்பெடியை அதிகாரிகள் சந்திக்க தடை, கவர்னருடன் மோதல் முற்றுகிறது

தொகுதிக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு நாராயணசாமி வலியுறுத்தல்

Update: 2017-06-05 23:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் கவர்னர் கிரண்பெடிக் கும், முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே நாளுக்குநாள் மோதல் அதிகரித்து வருகிறது.

விமர்சனம்

கவர்னர் கிரண்பெடி முதல்-அமைச்சர் நாராயணசாமியை விமர்சித்து சமூக வலைதளங் களில் கருத்துகளை பதிவிட்டிருந்தார். இந்த பிரச்சினையை நேற்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எழுப்பினார்கள். கவர்னரை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும், அல்லது ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது தொடர்பான தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கவர்னருக்கு கடிதம்

நானும் கடந்த ஒரு வருட காலமாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிக்காரர்கள் கவர்னரின் செயல்பாடு தொடர்பாக விமர்சிக்காமல் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று கூறினேன். அவரது செயல்பாடு தொடர்பாக தொடர்ந்து பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடித பரிவர்த்தனையும் செய்தேன். கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளின் அதிகாரம் என்ன? என்பது குறித்து சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன். ஆனால் பதில் வரவில்லை.

டெல்லியை பொறுத்தவரை நிலம், நிதி, சட்டம்-ஒழுங்கு போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும். ஆனால் புதுச் சேரியில் அது மாநில அரசிடம் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை கவர்னருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

தனிப்பட்ட அதிகாரம் இல்லை: அரசுத்துறைகளை பொறுத்தவரை அமைச்சர்கள்தான் அதிகாரம் பெற்றவர்கள்.


புதுவையை பொறுத்தரை கவர்னருக்கு தனிப்பட்ட முழு அதிகாரம் கிடையாது. அவர் அமைச்சரவையின் ஆலோசனையை கேட்டுதான் செயல்பட வேண்டும். அமைச்சரவை முடிவு செய்தால் அதற்கு ஒப்புதல் தருவதுதான் அவரது வேலை. சிக்கலான பிரச்சினை என்றால் அதை மத்திய அரசுக்கு அனுப்பலாம். அதுகூட தெரியாமல் எல்லாவற்றையும் மத்திய அரசுக்கு அனுப்பி வருகிறார். நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்கிறார்.

குறிப்பாக விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் முடிவு செய்து சட்டமன்றத்தில் அறிவித்து கவர்னருக்கு கோப்பு அனுப்பினோம். ஆனால் அதை திருப்பி அனுப்புகிறார். அவர் தான் எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் செய்து வருகிறார். கடனை ரத்து செய்ய நமக்கு அதிகாரம் இல்லை என்கிறார். டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற வலைதளங் களில் விமர்சிக்கிறார். மத்திய அரசிடம் நிதி பெற வேண்டும் என்றால் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என்கிறார். அவர் தான் கவர்னர் என்பதை மறந்து தரம் தாழ்ந்து பேசுகிறார். அதிகாரிகளை பொதுமக்கள் மத்தியில் தரக்குறைவாக பேசி அசிங்கப்படுத்துகிறார். அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அதிகாரியிடம் போனில் பேசினால், மந்தி ரியை இங்கு வரச்சொல் என்கிறார். எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளை அயோக்கியர்கள் என்று விமர்சிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மருத்துவ முதுகலை இடங்களை நாங்கள் தனியாருக்கு வழங்கினோம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். நாங்கள் சென்டாக் மூலம் வெளிப்படையாகத்தான் கலந்தாய்வு நடத்தினோம். இதற்கு மத்திய சுகாதாரத்துறை, பிரதமரிடம் ஒப்புதல் பெற்றுள்ளோம். கவர்னர் தனது எல்லைக்குள் செயல்பட வேண்டும்.

தொகுதிக்குள் விடாதீர்கள்

சப்-இன்ஸ்பெக்டர் வேலையை கவர்னர் பார்க்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம். உங்களுக்கு அதிகாரம் இல்லை. பசுமை தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கு தொடர்பாக புதுவை அரசுக்கு அபராதம் விதியுங்கள் என்று நீதிபதிக்கு கடிதம் எழுதுகிறார். கவர்னர் பதவி வகிக்க தகுதி இல்லாத நிலையில் செயல்படுகிறார்.

தொடர்ந்து அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே எந்த ஒரு அதிகாரியும் அமைச்சர்கள் உத்தரவு இல்லாமல் இனி கவர்னரை சந்திக்கக்கூடாது. கவர்னர் தங்களது தொகுதிக்குள் வந்தால் எம்.எல்.ஏ.க்கள் மறியல் செய்ய வேண்டும். அவரை தொகுதிக்குள் நுழைய விடக் கூடாது.

கவர்னர் எங்களையும், அதிகாரிகளையும் விமர்சிக்க அதிகாரமில்லை. எல்லை மீறினால் அதற்கான விளைவினை சந்திக்க நேரிடும். கவர்னரின் நடவடிக்கைகள் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களின் கருத்துகள் குறித்து உடனடியாக பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

கவர்னர் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து புதுவை வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார். கோப்புகளை அனுப்பினால் ஒப்புதல் தருவதுதான் அவரது வேலை. அவர் தனது எல்லை வரம்புக்குள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மேலும் செய்திகள்