இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் வழங்கப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும்
இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் வழங்கப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் மனுதாரருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை,
இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் நடந்த ‘நீட்’ தேர்வின் வினாத்தாள்களை மனுதாரர்கள் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால தடைமருத்துவம் பல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாக ‘நீட்’ தேர்வு கடந்த மாதம் 7–ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. 9 மொழிகளில் நடந்த இந்த தேர்வின் வினாத்தாள் ஒரே மாதிரியாக வழங்கப்படாமல், வெவ்வேறான கேள்விகள் இடம் பெற்றிருந்தன என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதனால், ‘‘மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கான ஒரே அளவீடாக ‘நீட்’ தேர்வு அமையாது. எனவே அந்த தேர்வை ரத்து செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும்’’ என்று திருச்சியை சேர்ந்த சக்திமலர்கொடி, மதுரையை சேர்ந்த ஜொனிலா, சூர்யா உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தும், விசாரணையை வருகிற 12–ந் தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிட்டது.
மற்றொரு மனுஇந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபோ கிளாட்வின் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘சமீபத்தில் நடந்த ‘நீட்’ தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படவில்லை. ஆங்கில மொழியில் கேட்கப்பட்ட வினாக்களை காட்டிலும் தமிழ், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தன. ஒரே வகையான வினாத்தாள் இல்லாததால் தரவரிசை பட்டியல் தயாரிப்பு என்பது சரியாக இருக்காது. எனவே கடந்த மே மாதம் 7–ந் தேதி நடந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்து, பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
மனுதாரருக்கு உத்தரவுஇந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட சில மொழிகளில் ‘நீட்’ தேர்வு வினாத்தாள்கள் எளிமையாக இருந்துள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்த வினாக்கள் கடுமையானவையாக இருந்ததால் மனுதாரர் உள்ளிட்டவர்கள் தேர்வை சரிவர எழுத முடியவில்லை’’ என்று வாதாடினார்.
இதனையடுத்து, ‘‘இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் நடந்த ‘நீட்’ தேர்வின் வினாத்தாள்களை மொழிபெயர்த்து மனுதாரர் தரப்பினர் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மனு குறித்து பதில் அளிக்க மத்திய–மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 15–ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.