புதிரைவண்ணார் சமுதாயத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை

புதிரைவண்ணார் சமுதாயத்தினருக்குசாதி சான்றிதழ் வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை

Update: 2017-06-05 22:00 GMT
விருதுநகர்.

சாத்தூர் பகுதியில் புதிரை வண்ணார் சமுதாயத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிரை வண்ணார் எழுச்சி பேரவை மாவட்ட செயலாளர் பழனிவேல் முருகன் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

புதிரை வண்ணார் சமுதாயம்

புதிரை வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த 500 குடும்பத்தினர் சாத்தூர் மற்றும் பிற பகுதிகளில் வசித்து வருகின்றனர். எங்களது குழந்தைகள் வெவ்வேறு பள்ளிகளில் கல்வி பயின்று வரும் நிலையில் இவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்க சாதி சான்றிதழ் மிகவும் அவசியமாக உள்ளது. சாதி சான்றிதழ் கேட்டு சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு செய்துள்ளோம்.

மறுப்பு

ஆனால் சாத்தூர் தாசில்தார் புதிரை வண்ணார் சாதி சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறார். எங்கள் விண்ணப்பங்களை ஏற்க மறுக்கும் நிலையும் உள்ளது. இதனால் எங்கள் குழந்தைகளுக்கு வரும் கல்வி ஆண்டில் பெரும் பாதிப்பு ஏற்படுவதோடு, அரசு சலுகைகளும் கிடைக்காத நிலை ஏற்படும். இது குறித்து சாத்தூர் தாசில்தாரிடம் பல முறை வலியுறுத்தி கூறியும் அவர் தொடர்ந்து சாதி சான்றிதழ் தர மறுக்கிறார்.

கோரிக்கை

எனவே புதிரை வண்ணார் சமுதாயத்துக்கு நிரந்தர சாதிசான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, சாதி சான்றிதழ் தர மறுக்கும் சாத்தூர் தாசில்தார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக புதிரை வண்ணார் சமுதாயத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிரை வண்ணார் எழுச்சி பேரவை மாவட்ட செயலாளர் பழனிவேல் முருகன் தலைமையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்