மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அடிபம்புகளை சீரமைத்து தரக்கோரி கலெக்டரிடம் மனு

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, பழுதடைந்த அடிபம்புகளை சீரமைத்து தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2017-06-05 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 247 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

அடிபம்புகளை சீரமைக்க கோரிக்கை

கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை அருகே கோரையாறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் ஊரில் உள்ள 2 அடிபம்புகள் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அதிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் தண்ணீருக்காக மக்கள் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த அடிபம்புகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் எளிதில் தண்ணீர் பிடிக்கும் வகையில் அங்கு குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

சேதமடைந்த சாலை

இதேபோல் வேப்பந்தட்டை வட்டம் அரசலூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், பெரம்பலூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையிலிருந்து அரசலூர் வரை அமைக்கப்பட்ட சாலையானது நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை பெரம்பலூர் டவுனுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய மிகுந்த சிரமமாக இருக்கிறது. எனவே சேதமடைந்த இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாலன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்