குடியிருப்பு பகுதிக்கு செல்ல சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் வலியுறுத்தல்

பட்டுக்கோட்டையில் அகல ரெயில்பாதைக்கு தண்டவாளத்தை உயர்த்தி அமைக்கும் பணி நடைபெறுவதால் குடியிருப்பு பகுதிக்கு செல்ல சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2017-06-05 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டை- அதிராம்பட்டினம் சாலையில் அண்ணா குடியிருப்பு பகுதியில் 736 குடும்பங்கள் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்புக்கு அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் பொதுப்பாதை உள்ளது. பட்டுக்கோட்டை மின்மயானத்திற்கு நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இறந்தவர்களின் உடல்கள் இந்த வழியாகத்தான் எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படு கிறது.

சுரங்கப்பாதை

பள்ளி செல்லும் குழந்தைகள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகிறார்கள். ஏற்கனவே இருந்த மீட்டர்கேஜ் பாதையால் எந்த பிரச்சினையும் இல்லாமல் நாங்கள் சென்று வந்தோம். தற்போது அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது எங்கள் பகுதிக்கு செல்லும் சாலையில் சுரங்கப்பாதை அமைத்து பொதுமக்கள் இடையூறு இல்லாமல் சென்று வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். தற்போது சுரங்கப்பாதை அமைக்காமல், ரெயில்வே தண்டவாளப்பகுதியை உயர்த்தி வருகிறார்கள்.

இதனால் நாங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியே வருவதற்கு எந்தவித பாதையும் கிடையாது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கலெக்டர், அண்ணாகுடியிருப்பு பகுதியில் ஏற்கனவே பாதை இருந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூல்

கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் மேலக்காவேரியில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பள்ளி சீருடைகளை ஒரு குறிப்பிட்ட ஜவுளிக்கடையில் தான் எடுக்க வேண்டும் என்று டோக்கன் கொடுக்கிறார்கள். எனவே கலெக்டர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

வாகன வசதி

ஒரத்தநாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக்கழக ஒன்றிய செயலாளர் சின்னராஜா கொடுத்த மனுவில், “பட்டுக்கோட்டையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தாலுகாவை சேர்ந்தவர்கள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து இங்கு தான் புகார்கள் அளித்து வருகிறார்கள். ஆனால் இங்கு பெறப்படும் மனுக்கள் குறித்து விசாரணை நடத்த பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கு போலீசாருக்கு ஜீப் வசதி இல்லை. இதனால் புகார்கள் தேக்கம் அடைகிறது. இதனால் புகார் கொடுக்க வருபவர்களும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு ஜீப் வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும் போலீஸ் பற்றாக்குறையையும் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

மேலும் செய்திகள்