தமிழகத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை ஜெயலலிதா விட்டுச் சென்றுள்ளார்

தமிழகத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை ஜெயலலிதா விட்டுச் சென்றுள்ளார் சீமான் பேச்சு

Update: 2017-06-05 23:15 GMT

தொண்டி,

தமிழகத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை ஜெயலலிதா விட்டுச்சென்றுள்ளார் என திருவாடானையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

பொதுக்கூட்டம்

திருவாடானையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ராம்கி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகூர்கனி, தொகுதி செயலாளர் ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் சட்டமன்ற தொகுதி தலைவர் காளீசுவரன் வரவேற்றார்.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:– நாம் தமிழர் கட்சி தமிழர் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழனும் தமிழும் 50,000 ஆண்டுகளுக்கு மூத்தவர்கள் என உலக அறிஞர்களும், நம் முன்னோர்களும் சொல்லி சென்றுள்ளனர். தமிழ்நாட்டை சாதியால் ஆளமுடியாது. என்னிடம் பலர் கேட்கிறார்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதியை எதிர்க்காத நீங்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும்போது என் எதிர்க்கிறீர்கள் என்று, மிகப்பெரிய கனவுகளோடு நாம் தமிழர் கட்சி தமிழக மக்களுக்காக போராடி வருகிறது. ஒட்டு மொத்த தமிழர்களும் சேர்ந்து ஒரு தமிழனை ஆட்சி செய்ய வைக்கமுடியும். யார் வேண்டுமானாலும் இந்த நிலத்தில் வாழலாம். ஆனால் இந்த நிலத்தை தமிழன் தான் ஆளமுடியும். நான் தமிழக முதல்வராக ஆட்சியில் இருந்தால் தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் எளிதாக சுட்டுவிட முடியாது.

தண்ணீர் பிரச்சினை

பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன் இதுதான் என்கனவு இந்தியா என்ற புரட்சியாளன் பகத்சிங் பாதையில் பயணிக்கும் நாம் தமிழர் கட்சி. தமிழகத்தில் தனிமனித அபிமானிகளை ஒழிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் அரசியல் படிக்க வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகாளாக கத்தினேன். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு தான் தமிழக மக்கள் ஓட்டுப்போட்டீர்கள். அரசியல் என்பது வாழ்வியல். அரசியல் வேண்டாம் என நீங்கள் விலகி நின்றால் நாம் யாரை வெறுக்கிறோமோ அவர் தலைமையிலான ஆட்சியின்கீழ் தான் வாழவேண்டி வரும். நான் அரசியல்வாதியாக உங்கள் முன்னால் நின்று பேசவில்லை. உங்கள் மகனாக நான் பேசுகிறேன்.

இன்று தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. நான் ஆட்சிக்கு வந்தால் உங்களின் வீடுகளுக்கு வாசலுக்கு தண்ணீர் வரும். நாங்கள் பெரும் கனவுகளோடு பயணிக்கிறோம். எங்கள் ஆட்சியில் அனைவருக்கும் வேலை தருவோம். பசி, பஞ்சம், கொலை, கொள்ளை போன்ற எந்த பிரச்சினையும் இருக்காது. உழைக்காமல் யாரும் இருக்க முடியாது. ஓய்வு பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் முதியோர் பென்சன் வழங்கப்படும். ஆடு,மாடு மேய்த்தலை அரசு வேலையாக மாற்றுவேன். பனைமரங்களை கொண்டு உலகத்தை திரும்பி பார்க்க வைப்பேன். ரேசனில் வெள்ளை சர்க்கரை தடை செய்வேன்.

மதுக்கடை மூடப்படும். பனஞ்சாறு, மூலிகை சாறு குடிக்க செய்வேன். கல்வி, மருத்துவமும் அனைவருக்கும் சமமாக இலவசமாக தருவோம். கல்வி முறை மாற்றப்படும். தனித்திறன் கல்விக்கு முக்கியத்துவம் முதன்மை பாடமாக மாற்றுவோம். பெற்று கொடுங்கள் பிள்ளைகளை கற்று கொடுக்கிறோம். அவர்கள் நம்நாட்டின் பிள்ளைகள். முதல்–அமைச்சர் முதல் அரசு அதிகாரிகள் வரை அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என சட்டம் கொண்டு வருவோம்.

ரூ.5 லட்சம் கோடி கடன்

நம் வளங்களை அளித்து வருவதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. அரசு போக்குவரத்து துறையில் ரூ.44,000 கோடி கடன். மின்துறையில் பல ஆயிரம் கோடி நஷ்டம். மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார் சென்றுவிட்டார். நாம் தமிழர் கட்சியின் தத்துவங்களை வைத்து ஒருநாள் ஆட்சியை நடத்துவார்கள். நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றால் கச்சத்தீவு மீட்கப்படும்.

நான் முதல்–அமைச்சராக வந்தவுடன் கச்சத்தீவு திருவிழா எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கடலோர மீனவர்களுக்காக நெய்தல் படை அமைத்து மீனவர்களை பாதுகாப்பேன். ஒரே நாளில் மீனவர் பிரச்சினையை உலக பிரச்சினையாக உருவாக்குவேன். உயர்ந்த நோக்கத்துடன் பயணித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் அறிவுச் செல்வன், டொமினிக் ரவி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் புனிதா, புவனேசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்