நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர்.;

Update: 2017-06-05 23:00 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக் களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாவட்டம் உவரி செல்லும் சாலையில் உள்ள பெட்டைகுளம் கிராமத்தில் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று கூறி பெட்டைகுளம் கிராமம், அப்துல் கலாம் நகர் கிராம மக்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கரீம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டரிடம் மனு

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திசையன்விளையில் இருந்து உவரி செல்லும் சாலையில் பெட்டைகுளத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதன் அருகில் கோவில், பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு செல்கின்ற மாணவ- மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அந்த டாஸ்மாக் கடையை உடனே மூடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் வீரவநல்லூர் மயோபதி காப்பகம் அருகே உள்ள புதிதாக மதுக்கடை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே அங்கு புதிய மதுக்கடை அமைக்க கூடாது என்று கூறி அந்த பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கூடுதல் கல்வி கட்டணம்

இந்து முன்னணியினர் பாளையங்கோட்டை மண்டல தலைவர் முத்துசரவணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் உள்ள சில தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மாணவ-மாணவிகளிடம் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்கிறார்கள். அந்த பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர், மாவட்ட செயலாளர் திவான் ஒலி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தென்காசி நகரசபைக்கு உட்பட்ட 19-வார்டு கீழபுலியூர் மெயின்ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் விணாக ரோட்டில் செல்கிறது. இதனால் சாலை சேதமடைந்து உள்ளது. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இலவச வீடுகள்

மானூர் அருகே உள்ள கானார்பட்டியில் மாடுகள் மேய்ச்சலுக்கு செல்கின்ற பாதையை முள்வேலி அமைத்து தனிநபர் ஆக்கிரமித்து உள்ளதை உடனே அகற்ற வேண்டும் என்று கூறி தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் ஆபிரகாம் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

திராவிட மக்கள் விடுதலை கட்சியினர், மாவட்ட செயலாளர் வெண்ணிமுத்து தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் அரசு திட்டத்தில் இலவச வீடுகள் கட்டுவதற்கு தேவையான மணல் வழங்க வேண்டும். ஆலங்குளம் அருகே உள்ள காவலாக்குறிச்சி அருகே உள்ள குறிஞ்சான்குளம் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு குழியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்