கல்பாக்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கல்பாக்கம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2017-06-05 22:15 GMT

கல்பாக்கம்,

கல்பாக்கம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலி குடங்களுடன் மறியல்

கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் பச்சம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலூர் கிராமத்தில் சுமார் 150–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக இந்த பகுதியில் போதிய குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் நேற்று காலை 11 மணியளவில் திடீரென அருகில் உள்ள கடலூர்–மதுராந்தகம் நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மோட்டார் பழுது

இதுபற்றி தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலன், வரதராஜன் மற்றும் அணைக்கட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த பெண்கள், ‘‘கடந்த 2 மாதங்களுக்கு முன் இங்குள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. அன்று முதல் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் தொலைவில் வயல்வெளிகளில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுமந்து வந்து பயன்படுத்தி வருகிறோம். எங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்’’ என்றனர்.

அதை கேட்ட அதிகாரிகள், உடனடியாக பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்கும்படி உத்தரவிட்டனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்