கேளம்பாக்கம் அருகே கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை
கேளம்பாக்கம் அருகே கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை;
திருப்போரூர்,
கேளம்பாக்கத்தில் கள்ளக்காதல் தகராறில், கள்ளக்காதலனின் தம்பியான கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதல்காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த கழிப்பட்டூர் சமத்துவ நகரில் வசித்து வந்தவர் வீரசிங்கம் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவருக்கு புஷ்பலதா(35) என்ற மனைவியும், கபில்(5) என்ற மகனும், சவுந்தர்யா(3) என்ற மகளும் உள்ளனர்.
இவரது வீட்டின் அருகே வசிக்கும் விஜயா என்ற பெண்ணுக்கும், வீரசிங்கத்தின் அண்ணன் மேகநாதன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலைநேற்று முன்தினம் இரவு விஜயாவின் மகன்களான கோபால்(25), சீனிவாசன்(23) இருவரும் வீரசிங்கத்தின் வீட்டுக்கு சென்று, எங்கள் தாயுடன் மேகநாதன் பழகி வருவதை உடனே நிறுத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு முற்றியது. பின்னர் 2 பேரும் சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில் வீரசிங்கம் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு தனியாக நடந்து சென்றார். அப்போது கோபால், சீனிவாசன் மற்றும் அவர்களின் 17 வயது நண்பர் ஆகிய 3 பேரும் வீரசிங்கத்தை சுற்றி வளைத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரசிங்கம் பரிதாபமாக இறந்தார்.
4 பேரிடம் விசாரணைஇதுபற்றி தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், கொலை செய்யப்பட்ட வீரசிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை தேடி வந்தனர். இதற்கிடையில் விஜயா மற்றும் வீரசிங்கத்தை வெட்டிக்கொலை செய்த 3 பேர் என 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.