கல்பாக்கத்தில் கதிர் வீச்சு எதிர்ப்பு மாநாடு நடத்தப்படும் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் பேச்சு

கல்பாக்கத்தில் கதிர் வீச்சு எதிர்ப்பு மாநாடு நடத்தப்படும் என்று அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2017-06-05 22:45 GMT

கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அணுமின்நிலையம் குறித்த பாதுகாப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுசெயலாளர் அப்துல்சமது தலைமை தாங்கினார்.

இதில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் பேசியதாவது:–

வஞ்சிக்கும் போக்கு

குஜராத் மாநிலத்தில் அணுமின்நிலையம் அமைக்க முயற்சித்தபோது அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனவே அங்கிருந்து ஆந்திர மாநிலத்திற்கு அணுமின்நிலையத்தை மாற்றினார்கள். தமிழகத்தில் அணுஉலைக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் மத்திய அரசு மதிப்பு அளிக்கவில்லை. மாறாக தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கில் நடந்துகொள்கிறது. ஆளும் அ.தி.மு.க அரசு போதிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேடிக்கை பார்க்கிறது.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மாநில மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அது தவறு. கூடங்குளத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்உற்பத்தி தடை ஏற்பட்டு வரும் நிலையில் மேலும் 5–வது, 6–வது உலைகளை அமைக்க ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

மாநாடு

எனவே கல்பாக்கம் அணுமின்நிலைய பாதுகாப்பு மற்றும் கதிர்வீச்சு தன்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோர்ட்டு உத்தரவுபடி உடனடியாக இந்த பகுதியில் ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும். தவறினால் வரும் ஆகஸ்டு மாத இறுதியில் கதிர் வீச்சு எதிர்ப்பு மாநாடு கல்பாக்கத்தில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்