சொந்த ஊரில் பாராட்டு விழா சினிமாத்துறைக்கு வந்த பிறகு என் சுதந்திரம் பறிபோனது

சொந்த ஊரில் பாராட்டு விழா சினிமாத்துறைக்கு வந்த பிறகு என் சுதந்திரம் பறிபோனது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை

Update: 2017-06-05 22:45 GMT

பள்ளிப்பட்டு,

சினிமாத்துறைக்கு வந்த பிறகு எனது சுதந்திரம் பறிபோனது என தனது சொந்த ஊரில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் தெரிவித்தார்.

பாராட்டு விழா

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோணேட்டம்பேட்டை கிராமம். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த கிராமத்தில் பிறந்தவர். இவர், தனது 72–வது பிறந்த நாளை தனது கிராமத்தில் எளிமையாக கொண்டாடினார். அவருக்கு கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர்.

முன்னதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் கோணேட்டம்பேட்டை கிராமத்தில் உள்ள வரசித்தி சம்பத்து விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் அவருடைய மனைவிக்கு கிராம மக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது:–

சுதந்திரம் பறிபோனது

நான் 72 ஆண்டுகளுக்கு முன் இந்த கோணேட்டம்பேட்டை கிராமத்தில் உள்ள வீட்டில் சிறிய அறையில் பிறந்தேன். எனது தந்தை கதாகாலட்சேபம் தொழில் செய்தவர். நான் சினிமாத்துறையில் நுழைந்த பிறகு உலக அளவில் புகழ் பெற்றேன்.

நான் தாய்மொழியை (தெலுங்கு) மறந்து நீண்ட நாட்களாகிவிட்டது. எனது தாய்மொழி இப்போது இசை தான். இந்த கிராமத்திற்கு நான் இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆனாலும் நான் பிறந்த இந்த கிராமத்து மக்கள் என் மீது வைத்திருக்கும் பாசம் என்னால் மறக்க முடியவில்லை.

நான் இதுபோல் ஆனதற்கு காரணம் எனது சுதந்திரம் பறிபோனதுதான். பிரபல பாடகராக ஆன பிறகு என்னால் தனியாக தெருவில் இறங்கி நடக்க முடியவில்லை. சாமி கும்பிட கோவிலுக்கு செல்ல முடியவில்லை. சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு உறவினர்கள் வீட்டுக்கு கூட செல்ல முடியவில்லை. நான் செல்லும் இடம் எல்லாம் திரளான ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொள்கின்றனர். இதனால் என்னால் பிறருக்கு தொல்லை.

‘செல்பி’ எடுப்பது பிடிக்காது

தற்போது பலர் ‘செல்பி’ எடுக்கின்றனர். இது எனக்கு பிடிக்கவில்லை. என் கிராமத்து மக்கள் என்னை பாலசுப்பிரமணியமாக பார்க்காமல் கோணேட்டம்பேட்டை மணியாக பார்த்தால் போதும். இனி இந்த கிராமத்துக்கு 4 அல்லது 5 மாதங்களுக்கு ஒரு முறை வந்து செல்வேன். ஆடம்பரம் எனக்கு பிடிக்காது. எனது தந்தைக்காக ஆந்திர மாநிலம் நெல்லூரில் வெண்கல சிலை அமைத்து இருக்கிறேன்.

இந்த கிராமத்தை பார்க்கும்போது எனக்கு சிறு வயது ஞாபகம் வருகிறது. நான் இரவு நேரத்தில் பள்ளிப்பட்டுக்கு சென்று சினிமா பார்த்து வருவேன். அப்போது எனக்கு என் தாயும், அக்காவும் துணையாக வருவார்கள். வழியில் வரும் சுடுகாட்டை கண்டால் எனக்கு பயம். அப்போது எனது சகோதரி என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு வீட்டுக்கு வருவார்.

குளத்தை தூர்வார வேண்டும்

நான் ஆண்டவனை வேண்டும்போது, கெட்டவர்களை நல்லவர்களாக்க வேண்டும். நல்லவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுவேன். இப்போது நம்பியவர்களை கெடுப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. என் வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன.

நான் பிறந்த இந்த கிராமத்துக்கு என்னால் பயன்படும் ஒரு பணியை செய்ய எனக்கு விருப்பம். இங்கு உள்ள துலக்காணத்தம்மன் கோவில் குளம் புதைந்து போய் உள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது இந்த குளத்தில்தான் நீச்சல் கற்றேன். அவ்வளவு தூய்மையான இந்த குளத்தை தூர்வாரி சீர்படுத்த வேண்டும். இதற்காக எனது உதவி தேவை என்றால் கண்டிப்பாக செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்