ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாவிட்டால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நீடிக்க முடியாது

ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாவிட்டால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நீடிக்க முடியாது அர்ஜூன் சம்பத் பேட்டி

Update: 2017-06-05 22:45 GMT

கொடைக்கானல்,

ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாவிட்டால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நீடிக்க முடியாது என்று கொடைக்கானலில் இந்து மக்கள் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

கொடைக்கானலில், ஒரு கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தடை சட்டம்

மாட்டு இறைச்சியை சாப்பிட மத்திய அரசு தடை விதிக்கவில்லை. இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவே சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனை தி.மு.க., முஸ்லிம் அமைப்புகள் மற்றும் நக்சல் சார்புடைய அமைப்புகள் உணவு பிரச்சினையாகவும், மத பிரச்சினையாகவும் மாற்ற முயற்சிக்கின்றன. இது கண்டிக்கத்தக்கதாகும். இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று மதுரை ஐக்கோர்ட்டு கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானலில் உள்ள யூகலிப்டஸ், பைன் மற்றும் வாட்டில் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு எதிரானது. அவற்றை அகற்ற வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்படுகின்றன. இதனை தடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. தற்போது 2 அணிகளாக பிரிந்துள்ளது. ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட பூரண மது விலக்கு, நதிநீர் இணைப்பு, விவசாய கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் செயல்படுத்தப்படாவிட்டால் இரு அணிகளும் மீண்டும் இணைந்தால் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது. கட்சியையும் காப்பாற்ற முடியாது.

வல்லரசாக மாற்ற...

தினகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரால் கட்சியில் அதிகார போட்டி நிலவும் வாய்ப்பு உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மத்திய அரசையும், ராணுவத்தையும் எதிர்த்து போராட்டம் நடத்தியவரே இரோம் சர்மிளா. அவர் தற்போது கொடைக்கானலில் சாதாரண குடிமகன்களை போல் தங்கியுள்ளார். தேனி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் போலீசாரை தாக்கியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக அரசு இதனை கண்காணிக்க வேண்டும்.

பிரதமர் மோடி நம் நாட்டை வல்லரசாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் அவர் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் சிலர் எதிர்க்கின்றனர். ஆனாலும் அந்த எதிர்ப்புகளை அவர் திறம்பட சமாளிப்பார். மத்தியில் இன்னும் 15 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சியே தொடரும். தமிழகத்திலும் இந்துத்துவ ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு உள்கட்சி பூசல் பிரச்சினைகளை கவனிக்கவே நேரம் சரியாக உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில இளைஞரணி செயலாளர் குமரன், நகர நிர்வாகிகள் ஆனந்த், கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்