கம்பம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்

கம்பம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2017-06-05 22:30 GMT

உத்தமபாளையம்,

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி 7–வது வார்டு பகுதியான சின்னப்பாலம் அருகே மதுக்கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதையொட்டி அந்த பகுதியில் மதுக்கடைக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதையொட்டி இந்த பகுதியில் மதுக்கடை அமைக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மறியல் போராட்டம்

இந்த நிலையில் நேற்று காமயகவுண்டன்பட்டியில் மீண்டும் மதுக்கடை திறக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையொட்டி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடை முன்பு மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராயப்பன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அவர் உறுதி கூறினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்