தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வேப்பிலை மாலை அணிந்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வேப்பிலை மாலை அணிந்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஆடிமாத கூழ் காய்ச்சுவதற்கு இலவச அரிசி வழங்க கோரிக்கை

Update: 2017-06-05 22:45 GMT

தேனி,

இந்து கோவில்களுக்கும் ஆடிமாத கூழ் காய்ச்சுவதற்கு இலவச அரிசி மற்றும் தானியங்கள் வழங்க வேண்டும் என்று தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வேப்பிலை மாலை அணிந்து இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேப்பிலை மாலை

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் மனு அளிப்பதற்காக இந்து எழுச்சி முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்களில் சிலர் கஞ்சிக் கலயத்தை தலையில் சுமந்தபடியும், சிலர் வேப்பிலை மாலை அணிந்தபடியும் வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளிவாசல்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச பச்சரிசி வழங்குவது போல், இந்து கோவில்களுக்கும் ஆடி மாத கூழ் காய்ச்சுவதற்கு இலவசமாக பச்சரிசி மற்றும் கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பியபோது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கூழ் காய்ச்ச அரிசி

பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

தமிழக அரசு சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி ரூ.12 கோடியே 60 லட்சம் செலவில் வழங்கப்பட உள்ளது.

இந்து கோவில்களின் சொத்துக்கள், வருமானம், நிர்வாகம் போன்றவற்றை இந்து சமய அறநிலையத்துறை மூலம் அரசே நிர்வாகம் செய்கிறது. மசூதி சொத்துக்கள் மற்றும் நிர்வாகம் வக்பு வாரியம் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தமிழக அரசு இந்து மக்கள் ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் காய்ச்சும் வழிபாடு என்பது ஆண்டாண்டு காலமாக உள்ள திருவிழா மரபு. கோவில்களில் ஆடிக்கூழ் ஊற்றும் திருவிழாவுக்கு தேவையான அரிசி, கம்பு, கேழ்வரகு தானியங்களை குறைந்தது 25 ஆயிரம் டன் அளவுக்கு அரசு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்