பழங்கால சாமி சிலைகள் திருட்டு ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவிலில் பழங்கால சாமி சிலைகள் திருட்டு போயின. இது குறித்த புகாரின்பேரில் ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜீயபுரம்,
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள திருப்பராய்த்துறையில் தாருகாவனேஸ்வரர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில் தேர்த்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 5–ம் நாள் உற்சவத்தின்போது சோமாஸ்கந்தருடன் அம்மன் மற்றும் அம்மன், சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது.
இந்நிலையில் கோவில் உள் பகுதியில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை எடுப்பதற்காக அர்ச்சகர் மற்றும் மெய்க்காவலர் ஆகியோர் கடந்த 1–ந் தேதி அறையின் கதவை திறந்தனர்.
சாமி சிலைகள் திருட்டுஅப்போது அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பழங்கால சண்டிகேஸ்வரர் சிலை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் கல்யாணி, மலைக்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் ஆகியோர் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அப்போது சண்டிகேஸ்வரர் சிலை மட்டுமின்றி, அங்காளம்மன் சிலை, போக சக்தி அம்மன் சிலை ஆகியவையும் திருட்டு போயிருப்பது கண்டு திடுக்கிட்டனர். திருட்டுப்போன 3 சிலைகளும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை என்று கூறப்படுகிறது.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் அனந்தகுமார் ராவ், ஜீயபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோவிலில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.