மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்கிறது.

Update: 2017-06-04 22:30 GMT

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி கடந்த ஒரு மாதமாக மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் வந்து அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் போன்றவற்றை பார்த்து சென்றனர்.

கோடை விடுமுறையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். வருகிற 7–ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும், நேற்று கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

குறிப்பாக கோடை விடுமுறையில் கடந்த மே மாதம் 1–ந்தேதி முதல் நேற்று வரை மாமல்லபுரத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக சுற்றுலாத்துறையின் புள்ளி விவரக்கணக்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்திய பின்னரும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்தனர். குறிப்பாக தங்கள் பெற்றோர்களுடன் கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.

கடற்ரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், வேன், கார் போன்ற சுற்றுலா வாகனங்களின் வருகையால் அங்கு நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதிகளில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

மேலும் செய்திகள்