சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது எனக்கும் முதல்–மந்திரி ஆகும் கனவு இருக்கிறது
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்றும், எனக்கும் முதல்–மந்திரி ஆக வேண்டும் என்ற கனவு உள்ளது என்றும் மந்திரி பரமேஸ்வர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்றும், எனக்கும் முதல்–மந்திரி ஆக வேண்டும் என்ற கனவு உள்ளது என்றும் மந்திரி பரமேஸ்வர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், போலீஸ் மந்திரியுமான பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆதிதிராவிடர் முதல்–மந்திரி ஆக...கர்நாடகத்தில் 2018–ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று மாநில தலைவராக என்னை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நியமித்துள்ளார். நான் மீண்டும் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதில் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் எழவில்லை. அதே நேரத்தில் அடுத்த முதல்–மந்திரி யார்? என்ற பிரச்சினையும் எழவில்லை.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து, ஆதிதிராவிடர் ஒருவர் முதல்–மந்திரி ஆக வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டால், அந்த பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் மீண்டும் எனது நோக்கம் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான்.
பதவி கிடைக்காமல் போனது2013–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நான் முதல்–மந்திரி வேட்பாளர் என்று சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சியை பொருத்த மட்டில் மாநில தலைவராக இருப்பவர் தான் முதல்–மந்திரி ஆவது வழக்கம். கடந்த சட்டசபை தேர்தலில் கொரட்டகெரே தொகுதி மக்கள் என்னை புறக்கணித்ததால், தேர்தலில் தோல்வி அடைந்தேன். இதனால் முதல்–மந்திரி பதவி கிடைக்காமல் போனது. இதன் காரணமாக ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த என்னை முதல்–மந்திரியாக ஆக்க வேண்டும் என்ற சிலர் கோரிக்கை விடுத்தனர். ஆதிதிராவிடர் சமுதாயத்தில் பிறக்க வேண்டும் என்று நான் மனு எதுவும் கொடுக்கவில்லை.
ஆதிதிராவிடர் முதல்–மந்திரி ஆக வேண்டும் என்பதற்காக என்னை காரணமாக கூற வேண்டாம். அந்த சமுதாயத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் ஒரு முறையாவது முதல்–மந்திரியாக வேண்டும் என்று, மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் கூறி வந்தனர். நான் முதல்–மந்திரி ஆக வேண்டும் என்பது முக்கியம் அல்ல. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான் அனைவரின் குறிக்கோளும்.
சித்தராமையா தலைமையில் சந்திப்போம்கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், முதல்–மந்திரியாக சித்தராமையாவை நியமிக்க வேண்டும் என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி மேலிடத்திடம் கூறினார்கள். எம்.எல்.ஏ.க்களின் விருப்பத்தை ஏற்று கட்சி மேலிடமும் சித்தராமையாவை முதல்–மந்திரியாக நியமித்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், அடுத்த முதல்–மந்திரி யார்? என்பதை எம்.எல்.ஏ.க்கள் தான் தீர்மானிப்பார்கள்.
கட்சி மேலிடம் சித்தராமையாவை மீண்டும் முதல்–மந்திரியாக நியமித்தால், அதனை ஏற்க அனைவரும் தயாராக உள்ளோம். மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். சித்தராமையா மீண்டும் முதல்–மந்திரியானால், அதனை அனைவரும் வரவேற்போம். இதற்கு எதிர்ப்பு எதுவும் இல்லை. சித்தராமையாவின் தலைமையிலேயே 2018–ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திப்போம்.
முன்கூட்டியே தேர்தல் வராதுமுதல்–மந்திரி ஆக வேண்டும் என்ற கனவு அனைத்து தலைவர்களுக்கு உண்டு. அந்த கனவு எனக்கும் உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். 113 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். பா.ஜனதாவினர் 150 இடங்களில் வெற்றி பெறுவதாக கூறுகிறார்கள். ஆனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் தான். சட்டசபைக்கு டிசம்பர் மாதத்திலேயே தேர்தல் நடத்த காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல.
காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் முழுவதும் ஆட்சி புரியும். 2018–ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் சட்டசபை தேர்தல் நடைபெறும். கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேருடன் நிரந்தரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறேன். அவர்கள் கட்சியில் இணைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அரசு தயாராக உள்ளது. ஆனால் மத்திய அரசு தான் போதிய நிதி ஒதுக்காமல் முட்டுக்கட்டையாக உள்ளது.
இவ்வாறு மந்திரி பரமேஸ்வர் கூறினார்.