கரூர்-திருச்சி இடையே ரெயில் பாதை மின்மயமாக்கல் பணி தீவிரம்

கரூர்- திருச்சி இடையே ரெயில் பாதை மின்மயமாக்கல் பணி தீவிரமடைந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

Update: 2017-06-04 22:45 GMT
கரூர்,

ரெயில்வேயில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு ரெயில்வேயில் அகல ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதில் கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், சேலம், ஈரோடு மார்க்க பாதைகள் மின்மயமாக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் கரூரில் இருந்து திருச்சி வரை அகல ரெயில் பாதை மின்மயமாக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ரெயில்வே தண்டவாளங்கள் அருகே மின்கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.

மார்ச் மாதத்திற்குள் முடிக்க...

மின்பாதை அமைப்பதற்கான தளவாட பொருட்கள், கரூர் ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடை அருகே குவித்து வைக்கப்பட்டுள்ளன. மின் கம்பிகள், இரும்பு குழாய்கள் உள்ளிட்டவை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் குறித்து ரெயில்வே வட்டாரத்தில் அதிகாரிகள் கூறுகையில், “கரூர்-திண்டுக்கல், கரூர்-திருச்சி, ஈரோடு-சேலம் இடையே மொத்தம் 360 கிலோ மீட்டர் தூரம் ரெயில் பாதை மின் மயமாக்கப்பட உள்ளது. இதில் கரூர்-திருச்சி இடையே பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை, புகளூர் ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. கரூர்-திருச்சி இடையே ரெயில் பாதை பணியை அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் கரூர்-திண்டுக்கல் இடையே பணியையும் முடிக்க முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

பயண நேரம் குறையும்

கரூர்-திருச்சி, திண்டுக்கல் மார்க்க ரெயில் பாதைகள் மின் மயமாக்கல் மூலம் பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படும். இதன் மூலம் ரெயிலின் வேகம் அதிகரிப்பதன் மூலம் பயண நேரம் சற்று குறையும். மேலும் சரக்கு ரெயில்களிலும் மின்சார என்ஜின் மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்