அரசு பஸ்சில் கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் பயணம் செய்த வாலிபர் கைது

கேரள அரசு பஸ்சில் கைத்துப்பாக்கியுடன் பயணம் செய்த நெல்லை வாலிபர் களியக்காவிளை அருகே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான நபர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்தது.

Update: 2017-06-04 23:00 GMT
களியக்காவிளை,

நாகர்கோவிலில் இருந்து கேரள அரசு பஸ் ஒன்று திருவனந்தபுரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் களியக்காவிளையை கடந்து கேரள மாநில பகுதியான அமரவிளை சோதனைச்சாவடியை இரவு 11 மணி அளவில் அடைந்தது.

சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் பஸ்சுக்குள் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினார்கள். அப்போது வாலிபர் ஒருவர் பையுடன் பஸ்சில் இருந்து எழுந்து ஓட முயன்றார். ஆனால் அவரை போலீசார் மடக்கி பிடித்துவிட்டார்கள். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது போலீசாருக்கும், பஸ்சில் இருந்த மற்ற பயணிகளுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பையில் ஒரு கைத்துப்பாக்கியும், 6 தோட்டாக்களும் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் அந்த துப்பாக்கியில் தோட்டாக்கள் இருக்கிறதா? என சோதனையிட்ட போது அதில் மேலும் 6 தோட்டாக்கள் பொருத்தி இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்து பாறசாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

நெல்லையைச் சேர்ந்தவர்

விசாரணையில் அவர் பிரவீன் ராஜ் (வயது 24) என்றும், நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது. அவரிடம் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் மற்றும் வேறு எந்தவொரு ஆவணமும் இல்லை என கண்டறியப்பட்டது. எனவே பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்ராஜை கைது செய்தனர். அவர் மீது நெல்லை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.

நெல்லையை அடுத்த சீவலப்பேரி பகுதியில் நடந்த ஒரு கொலையில் பிரவீன்ராஜை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில்தான் அவர் சிக்கியுள்ளார்.

இதற்கிடையே பிரவீன்ராஜ் போலீசாரிடம் கூறும்போது, திருவனந்தபுரத்தில் நண்பர் ஒருவர் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் கேட்டதாகவும், அவரிடம் கொடுப்பதற்காக பஸ்சில் கொண்டு சென்ற போது சிக்கிக் கொண்டதாகவும் கூறியதாக தெரியவருகிறது.

நண்பர் யார்?

பிரவீன்ராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. உரிமம் இல்லாத துப்பாக்கி அவருக்கு எப்படி கிடைத்தது? எதற்காக அந்த துப்பாக்கியை திருவனந்தபுரம் நோக்கி அவர் எடுத்துச் சென்றார்? யாரையேனும் கொலை செய்ய திட்டமிட்டு துப்பாக்கியுடன் சென்றாரா? நண்பர் யாருக்காவது துப்பாக்கி கொடுக்கச் சென்றிருந்தார் என்றால் அந்த நண்பர் யார்? அந்த நபர் என்ன நோக்கத்திற்காக துப்பாக்கியை திருட்டுத்தனமாக வாங்க முயன்றார்? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள கைத்துப்பாக்கி, 12 தோட்டாக்களை போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு, அதை எடுத்து வந்த பிரவீன்ராஜிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். நேற்று மாலையில் பிரவீன் ராஜ் நெய்யாற்றின்கரை கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார்.

திருவனந்தபுரத்தில் உள்ள பிரவீன்ராஜின் நண்பரை பிடிக்கவும் போலீசார் விரைந்துள்ளனர். அரசு பஸ்சில் கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் நெல்லை வாலிபர் பிடிபட்ட சம்பவம் பயணிகளி டையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்