தேங்கி கிடக்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு தண்ணீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2017-06-04 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் குடங்களுடன் நீர்த்தேக்க தொட்டி அமைந்து உள்ள இடங்களை தேடி செல்கின்றனர். அங்கு மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் நீர்த்தேக்க தொட்டி அமைந்து உள்ள பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

அதேபோல் ராஜாஜி பூங்கா அருகே உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மக்கள் வரிசையாக நின்று தண்ணீரை பிடித்து செல்கின்றனர். மேலும் டேங்கர் லாரிகளிலும் அந்த பகுதியில் இருந்து தண்ணீரை நிரப்பி, வார்டு வாரியாக கொண்டு சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

நோய் பரவும் அபாயம்

இந்த குடிநீர் குழாய் அமைந்து உள்ள பகுதியில் அதிக அளவில் தண்ணீர் வீணாகி, சாக்கடை போன்று தேங்கி கிடக்கிறது. நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன. இதன்மூலம் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நீர்த்தேக்க தொட்டி அருகே தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்