ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர் பிணம் தற்கொலையா? போலீசார் விசாரணை

ஓமலூர் அருகே, வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் ரெயில் தண்டவாளம் அருகே முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-06-04 23:00 GMT
ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்து உள்ள டேனிஸ்பேட்டை ஊராட்சி பெரிய வடகம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி முனியம்மாள். இவர்களுக்கு சதீஷ்குமார் (வயது 18), ஜோதிமணி (16) என்ற 2 மகன்களும், சங்கீதா (20) என்ற மகளும் இருந்தனர். சதீஷ்குமார் லாரியில் கிளனர் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதற்கிடையில் முனியம்மாளுக்கு கையில் கட்டு போடுவதற்காக நேற்று காலை அவர்களது குடும்பத்தினர் தர்மபுரிக்கு சென்று இருந்தனர். அங்கு கட்டு போட்டு விட்டு, ஜாதகமும் பார்த்து விட்டு மதியம் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது ஓமலூர் அருகே சேலம் - சென்னை ரெயில் தண்டவாளம் அருகே சதீஷ்குமார் முகம் சிதைந்து, கை, கால்களில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

அதிர்ச்சி அடைந்த அவர்கள் விரைந்து சென்று சதீஷ்குமாரின் பிணத்தை கைப்பற்றி வீட்டுக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம் வருமாறு:-

வாலிபர் சதீஷ்குமார் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பெரிய வடகம்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் இருக்கும் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது பெரிய வடகம்பட்டி பகுதியில் ஒருவரது கார் நின்று கொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக சதீஷ்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் அந்த கார் மீது மோதியது. இதில் கார் கதவின் கைப்பிடி சேதமடைந்தது.

தாக்குதல்

இதில் ஆத்திரம் அடைந்த அந்த காரின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் சதீஷ்குமார் அங்கு இருந்து சென்று விட்டார். இதற்கிடையில் கார் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் இரவு 7 மணியளவில் சதீஷ்குமார் வீட்டுக்கு சென்று தனது காரின் கதவு கைப்பிடியை சரி செய்து தரும்படி கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு சதீஷ்குமார் திங்கட்கிழமைக்குள் சரி செய்து தந்து விடுகிறேன் என்று கூறி உள்ளார். அப்போது அந்த 3 பேரும் விலை உயர்ந்த புதிய கார் கதவின் கைப்பிடியை சரி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவு ஆகும். உன்னால் எப்படி சரி செய்து தர முடியும் என்று கூறி தகராறு செய்து உள்ளனர். பின்னர் அங்கு இருந்து சென்ற அவர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் சதீஷ்குமார் வீட்டுக்கு வந்து அவரை மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் வீட்டை விட்டு வெளியே சென்ற சதீஷ்குமார் திரும்பி வரவில்லை. ரெயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

காரணம் என்ன?

இதையடுத்து சதீஷ்குமார் தண்டவாளத்தை கடந்தபோது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்