இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் விற்க தடை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்
இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் விற்க தடை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் கத்தோலிக்க பிஷப் கவுன்சில் வலியுறுத்தல்
மதுரை,
இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் விற்பனைக்கான தடை உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க, லத்தீன் பிஷப் கவுன்சில்கள் வலியுறுத்தியுள்ளன.
இறைச்சி விற்பனைமாடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசின் தடை உத்தரவு குறித்து தமிழக கத்தோலிக்க பிஷப் கவுன்சில், தமிழக லத்தீன் பிஷப் கவுன்சிலின் தலைவர் அந்தோணி பாப்புச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மத்திய அரசு இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்பனை செய்வதற்கு சர்வாதிகாரப்போக்கில் தடை விதித்துள்ளது. வேளாண்மை சார்ந்த தொழிலை பிரதானமாக கொண்ட ஜனநாயகக் குடியரசு நாட்டில் மக்கள் நலனை மறுப்பது மனித உரிமைக்கு எதிரானது. குடிமக்களை மத ரீதியில் வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது.
பன்முக கலாசாரத்தை கொண்ட நமது நாட்டில் அரசின் இது போன்ற செயல்பாடுகள் பாசிச அரசியலுக்கு சமமாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக கத்தோலிக்க கிறித்தவ பிஷப் கவுன்சில் இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்ளாது.
மதவாதப்போக்குஜீவகாருண்யத்திற்கு எதிராக இல்லாவிட்டாலும் கூட, மனித மாண்புகளுக்கு எதிரான வறட்டுத்தனமான போக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பா.ஜ.க. அரசு ஒரு மதவாத அரசாக இருப்பதால் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ள விவகாரத்திலும் அதன் மதவாதப்போக்கு வெளிப்பட்டுள்ளது.
பசுவதை தடையை ஏற்றுக்கொண்டாலும், விவசாயிகள், வேளாண் தொழிலில் ஈடுபடுபவர்கள் வாழ்வாதாரத்திற்காக பசுவை விலை கொடுத்து வாங்கி வருபவர்கள், வளர்ப்பவர்களை பசு பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் இந்துத்துவ பாசிச வன்முறையாளர்கள் அச்சுறுத்தி வருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
திரும்ப பெற வேண்டும்...இதன் மூலம் தேசத்தின் அமைதியையும், ஒற்றுமையையும் குலைக்க நினைப்பது ஜனநாயக நாட்டிற்கு மிகப்பெரிய அவமானமாகும். பசுப்பாதுகாப்பை கண்காணிக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது, சிறுபான்மை முஸ்லிம்களை தாக்குவது, கொலை செய்வது ஆகிய மனிதகுல விரோத செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் உரிமைகளை பறிப்பதும் சட்டவிரோதமாகும். எனவே, மத்திய அரசு விதித்துள்ள இந்த தடை சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.