காங்கேயம் அருகே எலெக்ட்ரீசியன் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு

காங்கேயம் அருகே பட்டப்பகலில் துணிகரம்: எலெக்ட்ரீசியன் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன்நகை, ரூ.1 லட்சம் திருட்டு போலீசார் விசாரணை

Update: 2017-06-04 22:15 GMT

காங்கேயம்,

காங்கேயம் அருகே பட்டப்பகலில் எலெக்ட்ரீசியன் வீட்டின் பூட்டை உடைத்து, 27 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

எலெக்ட்ரீசியன்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை அடிவாரத்தில் உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 40). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுடைய மகன் நந்தபிரபு (15).

இவன், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் பள்ளி விடுதியில் கொண்டு விடுவதற்காக மாணவனை, அவனுடைய பெற்றோர் பெருந்துறைக்கு நேற்று காலை அழைத்து சென்றனர். அப்போது வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.

27 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

பள்ளியில் நந்தபிரபுவை சேர்த்து விட்டு மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். பின்னர் வீட்டின் கம்பவுண்டு சுவர் கேட்டை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் பதற்றத்துடன் வீட்டிற்குள் பூபதி சென்றார். அங்கு மேஜை டிராயர் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பீரோ சாவியை காணவில்லை. அப்போது மற்றொரு அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு சாவியுடன் இருந்தது. உடனே பீரோவை பார்த்த போது அதில் வைத்து இருந்த, 27 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து காங்கேயம் போலீசில் பூபதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் பூமிபாலகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். பின்னர் போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. இந்த மோப்பநாய் பூபதி வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பணம் மற்றும் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். எலெக்ட்ரீசியன் பூபதி, வெளியூர் சென்று இருப்பதை நன்கு தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், பட்டப்பகலில் அவருடைய வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து, பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடி சென்ற துணிகச சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்