பனியன் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் கைது

மேற்கூரையில் துளைபோட்டு நுழைந்து பனியன் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் கைது

Update: 2017-06-04 22:30 GMT

அனுப்பர்பாளையம்,

பனியன் நிறுவனத்தில் மேற்கூரையில் துளைபோட்டு நுழைந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை திருடிய முன்னாள் ஊழியரை போலீசார் கைதுசெய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பனியன் நிறுவனத்தில் திருட்டு

திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரை சேர்ந்தவர் துரைசாமி(வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 29–ந்தேதி இரவு வழக்கம் போல் நிறுவனத்தை பூட்டிவிட்டு துரைசாமி தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலை அவர் நிறுவனத்துக்கு வந்தார். அங்கு அவர், கதவை திறந்து பார்த்த போது, பனியன் நிறுவனத்தின் மேற்கூரையில் துளை போடப்பட்டு இருந்தது. மேலும் அங்கு மேஜையின் உள்ளே இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த துரைசாமி, இதுபற்றி அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைசாமியின் பனியன் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் அனுப்பர்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ணன் தலைமையில் போலீசார் பி.என்.ரோடு பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல் பகுதிகளில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தோட்டத்துப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

முன்னாள் ஊழியர் கைது

விசாரணையில் அவர், நெருப்பெரிச்சல் குருவாயூரப்பன்நகர் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவிகுமார் (வயது 25) என்பதும், கடந்த 6 மாதத்துக்கு முன்பு வரை அவர் துரைசாமியின் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் துரைசாமியின் பனியன் நிறுவனத்தில் மேற்கூரையில் துளையிட்டு, உள்ளே நுழைந்து, ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை திருடிச்சென்றது சிரஞ்சீவிகுமார் தான் என்று தெரியவந்தது. இதைதொடர்ந்து சிரஞ்சீவிகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்தை மீட்டனர்.

மேலும் செய்திகள்