பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2–வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்

பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று 2–வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-04 22:30 GMT

பல்லடம்,

பல்லடம் அருகே மாதம்புதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பினார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காலவரையற்ற உண்ணாவிரதம்

இதனால் கடந்த 2–ந்தேதி டாஸ்மாக் கடையை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை அருகே உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். அப்போதும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த அங்கு வரவில்லை.

இதனால் டாஸ்மாக் கடையை மூடும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக அந்த கிராம மக்கள் அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் டாஸ்மாக் கடை அருகே, அந்த பகுதியை சேர்ந்த 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.

2–வது நாளாக உண்ணாவிரதம்

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட டாஸ்மாக் துணை மேலாளர் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் தீர்வு எதுவும் காணப்படவில்லை.

இதனால் போராட்டத்தை கைவிட மறுத்து, 12 பேரும் விடிய, விடிய உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 2–வது நாளாக நேற்றும் அவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்