பவானி பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு

பவானி பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு போராட்டம் நடத்த வந்த பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்தனர்

Update: 2017-06-04 22:30 GMT

பவானி,

பவானி பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் மீண்டும் திறந்து உள்ளனர். இதை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

டாஸ்மாக் கடைகள் அடைப்பு

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் கோர்ட்டு உத்தரவின்படி அடைக்கப்பட்டன. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் ரோட்டு ஓரம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன.

பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு ஒரு சில கடைகளே திறந்து இருந்ததால் குடிமகன்கள் பாடு திண்டாட்டம் ஆனது. ரே‌ஷன் கடைகளில் நிற்பதுபோல் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றார்கள். டாஸ்மாக் கடைகளின் வியாபாரமும் சொற்பமாக குறைந்தது. இதனால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தார்கள். ஆனால் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.

மீண்டும் திறப்பு

பொதுமக்களின் போராட்டங்களை மீறியும் கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளை மீண்டும் அதிகாரிகள் திறந்து வருகிறார்கள்.

பவானி போலீஸ் சூப்பிரண்டு உள்வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 14 டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே அடைக்கப்பட்டன.

கடந்த 3 நாட்களுக்குள் பவானி பகுதியை தவிர மற்ற பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் திறந்துவிட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்தநிலையில் நேற்று பவானி பகுதியில் உள்ள மயிலம்பாடி, பூனாட்சி, தொட்டிபாளையம், ஒலகடம், சித்தாறு, சனிச்சந்தை ஆகிய பகுதிகளில் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் திறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொடர்ந்து நடந்தது. ஒரு சில இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு இருந்தார்கள்.

மேலும் செய்திகள்