ஏரி, குளங்கள் தூர்வாரும் பணியை தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்

ஏரி, குளங்கள் தூர்வாரும் பணியை தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்

Update: 2017-06-04 22:30 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணியை தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

கடலூர் மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணமாக ஏரி மற்றும் நீர் நிலைகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில் நீர் நிலைகளில் இருந்து வண்டல் மற்றும் களிமண்ணை எடுப்பதன் மூலம் அதன் கொள்ளளவு அதிகரித்து எதிர்காலத்தில் கிடைக்கும் மழைநீரை சேமிக்கவும், விளைநிலங்களில் வண்டல் மண் விடுவதன் மூலம் மண்வளம் பெருகி மகசூல் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 228 ஏரிகள், 2 நீர் வழித்தடங்கள் மற்றும் ஒரு நீர்த்தேக்கம், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 231 ஏரிகள் மற்றும் குளங்கள், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் 75 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்பட மொத்தம் 537 நீர் நிலைகள் உள்ளன. இவற்றில் இருந்து வண்டல் மற்றும் களி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தூர்வார வேண்டும்

இதன்படி கடலூர் மாவட்டத்தில் இது வரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 463 கன மீட்டர் வண்டல் மற்றும் களி மண் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 ஆயிரத்து 682 விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு என்.எல்.சி. இந்தியா நிறுவனம், டாக்ரோஸ், சா‌ஷன் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணிகளை உடனடியாக தொடங்கி, முழுமையாக முடித்து தர வேண்டும். கடலூர் மாவட்ட தொழில் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீர்நிலைகளை தூர்வாரி வண்டல் மற்றும் களி மண்ணை எடுத்து அளிக்க வேண்டும். இதன் மூலம் நீர் ஆதாரங்களின் கொள்ளளவு அதிகரிக்கும். மண் வளம் பெருகி விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, சப்–கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் கலெக்டர் ராஜேஷ் நிருபர்களிடம் கூறுகையில், 102 நீர் நிலைகளை தொழில் நிறுவனங்கள் தூர்வாரி தருவதாக தெரிவித்துள்ளன. அதில் 68 நீர் நிலைகள் முழுமையாக தூர்வாரப்படுகின்றன. இந்த பணிகள் வருகிற 7–ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து தரவும் தொழில்நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்