108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணி கோவில் கும்பாபிஷேகம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணி கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2017-06-04 19:06 GMT

கீழக்கரை,

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா

ராமநாதபுரம் அருகே 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தொன்மை சிறப்பு வாய்ந்தது திருப்புல்லாணி திருக்கோவில். 108 திவ்ய தேசங்களில் 44 –வதாக திகழும் இந்த திருக்கோவிலில் ஆதிஜெகநாதபெருமாள்– பத்மாசனிதாயார் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். ராவணனிடம் இருந்து சீதையை மீட்க சென்ற ராமபிரான் திருப்புல்லாணியில் சமுத்திரத்தை கடக்க தர்ப்பை புல்லில் அமர்ந்து 3 நாட்கள் உபவாசம் இருந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோவில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 5.30 மணிக்கு நித்ய ஹோமங்கள் நடத்தப்பட்டு புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 7.50 மணிக்கு புனித நீர் கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமோ நாராயணா என்று பக்தி பரவசத்துடன் கோ‌ஷமிட்டனர். பிறகு ஆதிஜெகநாத பெருமாள் மற்றும் பத்மாசனி தாயாருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

புனித நீர்

விழாவில் ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில், ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன், மன்னர் குமரன் சேதுபதி, ராணி லெட்சுமி நாச்சியார், திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சாமிநாதன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கும்பாபிஷேக விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் மேற்குபகுதியில் கும்ப தரிசனம் செய்வதற்கு அனுமதி சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம்அடைந்தனர். கோவில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தில் ஊற்றப்படும் புனித நீர் பக்தர்களின் மீது தெளிப்பது வழக்கம். இந்த புனிதநீரால் பாவங்கள் நீங்கி பலன் சேரும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

ஏமாற்றம்

நேற்று கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் புனித நீர் ஊற்றப்படும் என்று எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். ஆனால், கோவிலில் பொருத்தப்பட்டிருந்த நீர் சுழற்றி எந்திரம் மின்பழுது காரணமாக வேலை செய்யவில்லை. இதன்காரணமாக பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்க முடியவில்லை. கோவில் கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்து தெளிக்கப்பட்ட புனிதநீர் மட்டும் கீழ்பகுதியில் நின்றிருந்த சில பக்தர்களின் மேல் விழுந்தது. இதனால் கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்