உத்தமபாளையம் பை–பாஸ் பஸ் நிறுத்தத்தில் விபத்தை தடுக்க ரவுண்டானா பொதுமக்கள் வலியுறுத்தல்

உத்தமபாளையம் பை–பாஸ் பஸ் நிறுத்தத்தில் விபத்தை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Update: 2017-06-04 22:15 GMT

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகாஅலுவலகம், போலீஸ் துணை சூப்பிரண்டு, மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, போலீஸ் நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், தலைமை மருத்துவமனை உள்ளிட்ட 30–க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் உள்ளன. இதனால் தினமும் பல்வேறு பணிகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இவை தவிர தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் அமைந்து இருப்பதால் இங்கு போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும். மேலும் தேனியில் இருந்து கேரள மாநிலம் குமுளி, தேக்கடிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கிறது.

ரவுண்டானா

இங்குள்ள பை–பாஸ் பஸ் நிறுத்தம் எப்போதும் மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்கள் வருகையால் பரபரப்பாக இருக்கும். இந்த பஸ் நிறுத்தம் ஏற்கனவே ஒரு வழிப்பாதையாக ஆக்கப்பட்டு விட்டது. இதனால் கம்பத்தில் இருந்து தேனி வரும் பஸ்களும், தேனியில் இருந்து கம்பம் செல்லும் பஸ்கலும் ஒரு வழிப்பாதை வழியாக செல்கிறது.

தற்போது இந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே புதிய பாலம் அமைத்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலம் அருகே பழமையான புளியமரம் இருந்தது. இதனால் போடி, தேவாரம், கோம்பை பகுதியில் இருந்து பை–பாஸ் பஸ் நிறுத்தம் நோக்கி வரும் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து வாகனங்கள் வரும் போதும் புளியமரம் சாலையை மறைத்து இருப்பதால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது.

தற்போது புளிய மரம் அகற்றப்பட்டு விட்டது. இதனால் பஸ்கள் சிரமம் இன்றி சென்று வர இந்த பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும். அப்போது தான் போக்குவரத்தை முறைப்படுத்த முடியம். எனவே இந்த பகுதியில் விபத்தை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்