மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டம் 3–வது நாளாக நீடிப்பு

மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது. இதனிடையே, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

Update: 2017-06-03 23:35 GMT

மும்பை,

மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது. இதனிடையே, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் திடீர் குழப்பம் ஏற்பட்டது.

விவசாயிகள் போராட்டம்

மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 1–ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் சாலைகளில் பாலை கொட்டியும், காய்கறிகளை வீதியில் வீசியும் விவசாயிகள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தேவேந்திர பட்னாவிசுடன் சந்திப்பு

இந்தநிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் கிஷான் சபா என்ற விவசாய அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் 70 சதவீத கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, ‘‘விவசாயிகளின் காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. மாநில அரசுக்கு எதிராக எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெற கூடாது’’ என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் குறிப்பிட்டார்.

சிவசேனா தொண்டர்கள் கைது

போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை கிஷான் சபா அமைப்பின் தலைவர் ஜெயாஜி சூர்யவன்ஷி உறுதிப்படுத்தினார். இதனால், திடீர் குழப்பம் ஏற்பட்டது. இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறி விவசாயிகள் இதனை ஏற்க மறுத்து, நேற்று 3–வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக நாசிக், அவுரங்காபாத், ஜல்காவ், நந்தூர்பார் ஆகிய பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்தது. துலேயில் விவசாயிகளுடன் சிவசேனா தொண்டர்களும் கரம் கோர்த்தனர். அப்போது, சிவசேனா தொண்டர்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

நந்தூர்பாரில் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாசிக் மாவட்டம் நிப்பாடு பகுதியில் விவசாய மந்திரி சதபாவு கோட்டின் உருவபொம்மையை விவசாயிகள் பாடையில் சுமந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னிப்பு

அத்துடன், விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக தன்னிச்சையாக அறிவித்த கிஷான் சபா தலைவர் ஜெயாஜி சூர்யவன்ஷியையும் கண்டித்தனர். இதைத்தொடர்ந்து, அவர் மன்னிப்பு கோரினார்.

இதுபற்றி நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘தற்காலிகமாக தான் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்தேன். விவசாயிகள் விருப்பப்பட்டால், நான் அவர்களுடன் இருந்து போராட்டத்தை தொடர்வேன். நான் தவறு செய்துவிட்டேன். அதற்காக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். ஏனென்றால், நான் விவசாயியின் மகன்’’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்