களக்காடு அருகே ஆசைக்கு இணங்க மறுத்ததால் திராவகம் வீசப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு

களக்காடு அருகே ஆசைக்கு இணங்க மறுத்ததால் திராவகம் வீசப்பட்ட பெண், 7 மாதங்களுக்கு பிறகு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-06-03 23:30 GMT

களக்காடு,

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் மூக்காண்டி என்ற முருகேஷ். இவர் தனியார் டயர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராமலெட்சுமி(வயது 28). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த குடும்பத்தினரை பார்க்க பாளையங்கோட்டை அருகில் உள்ள சீவலப்பேரியை சேர்ந்த சின்னத்துரை என்ற சின்னராஜ் (28) என்ற ஆட்டோ டிரைவர் அடிக்கடி வந்து செல்வார். அப்போது சின்னத்துரைக்கும், ராமலெட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

பாலியல் பலாத்கார முயற்சி

இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் 7–ந் தேதி சின்னத்துரை, ராமலெட்சுமியை கோவிலுக்கு வருமாறு தனது ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். களக்காடு அருகே சிங்கிகுளம் காட்டுப்பகுதியில் ஆட்டோ சென்றபோது ஆட்டோவை நிறுத்தி ராமலெட்சுமியை ஆட்டோவில் இருந்து கீழே இறங்குமாறு சின்னத்துரை கூறியுள்ளார்.

அதன்படி ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய ராமலெட்சுமியை, தனது ஆசைக்கு இணங்குமாறு சின்னத்துரை வலியுறுத்தி உள்ளார். இதற்கு ராமலெட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை, சின்னத்துரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து உள்ளார். ராமலட்சுமி அவருடன் போராடி தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

திராவகம் வீச்சு

இதனால் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை ராமலெட்சுமி மீது வீசிவிட்டு ஆட்டோவில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பலத்த காயங்களுடன் கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் திராவக வீச்சு காயம் உடலுக்குள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியதால், நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். 7 மாதங்களுக்கு பிறகு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்த அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர் மீது கொலை வழக்குப்பதிவு

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக களக்காடு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். சின்னத்துரை ஜாமீனில் விடுதலை ஆகி வெளியில் இருந்தார்.

இந்த நிலையில் ராமலெட்சுமி இறந்து விட்டதால் களக்காடு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து நேற்று சின்னத்துரையை மீண்டும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்